
சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் செய்தித் தொடர்பாளரும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தீவிர விசுவாசியுமான நடிகர் மீசை ராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் மீசை ராஜேந்திரன். இவருக்குத் திரையுலகில் களம் அமைத்துக் கொடுத்தவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன் காரணமாக, கடந்த 31 ஆண்டுகளாக விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக அவரது மன்றத்திலும், கட்சி தொடங்கப்பட்ட பின் கடந்த 21 ஆண்டுகளாக தேமுதிகவிலும் பயணித்து வந்தார்.
மேலும் அவருக்கு செய்தித் தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்று வந்த ராஜேந்திரன், முன்னதாக நடந்த தேர்தல்களில் போட்டியிடவும் வாய்ப்பு பெற்றார். இருப்பினும், விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சியில் தனக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார்.
நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் சீட் எதிர்பார்த்த நிலையில், தலைமை அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராஜேந்திரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுகுறித்து மீசை ராஜேந்திரன், "விஜயகாந்த் மீது கொண்ட பற்றால் பல ஆண்டுகாலமாக எனது உழைப்பை நல்கினேன். ஆனால், தற்போது விசுவாசத்திற்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை.
மிகுந்த மனவருத்தத்துடன் தேமுதிகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்," எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் மீசை ராஜேந்திரன் இணைந்தார்.
No comments: