சபையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பி, அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை நாம் தன்னிச்சையாக மேற்கொள்வதில்லை. அது நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கமைய இடம்பெறும். வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் காணப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இது பாரதூரமான பிரச்சினையாகக் காணப்படுகிறது.
அது தொடர்பில் வேலைத்திட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்துள்ளோம். இந்த வருடத்தில் ஒரு தொகை ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், அதற்காக மே மாதத்தில் பரீட்சையை நடத்தவும், கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறுபவர்களை அதற்காக இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் போது வெற்றிடங்கள் நிலவும் பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ். மாவட்டத்தில் இருக்கவே விரும்புகின்றனர். இது கலாசாரமாக உள்ளது. இடமாற்றங்களின் போது விரும்பிய இடங்களுக்குச் செல்லவே ஆசிரியர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு செய்ய முடியாது. வழங்கும் இடங்களை நிராகரிக்காமல் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் ஆசிரியர்களிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments: