
ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜய் பெருமாநல்லூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தவெக தேர்தல் வாக்குறுதி புத்தகமாக வரும் 16-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதற்கு முன்பாக சில முக்கிய வாக்குறுதிகளை மட்டும் அளிக்கிறேன். நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யும் வகையில் அரசுக்குச் சொந்தமான உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். முக்கிய நகரங்களில் கைத்தறி விற்பனை நிலையங்கள், ஷோரூம்கள் அமைக்கப்படும்.
கைத்தறி, நிலையற்ற நூல்விலை, மின்சார நெருக்கடியைப் பகிர்ந்து கொள்ள கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு வங்கிகளின் மூலமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
நெசவாளர்களுக்கு உற்பத்தி செலவைக் குறைக்க அவர்கள் வாங்கும் ரசாயனம், சாயங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
விரிவான ஆய்வுக்குப் பிறகு மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டு ஆண்டுக்களுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும். இந்த நிறுவனங்களை நவீனப்படுத்தவும், உலக அளவில் போட்டிபோடவும் 35 சதவீத நேரடி மூலதன மானியம் வழங்கப்படும். 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்கடன் தள்ளுபடி வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கப்படும். உழவர்கள் தோழன் திட்டத்தின்படி, விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும். 5 அல்லது அதற்கு மேற்பட்டுள்ள ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியில் உள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
No comments: