News Just In

4/04/2026 06:20:00 AM

இலங்கையில் சர்வதேச அமைதி நடைப்பயணம் - அமெரிக்காவிலிருந்து வரும் 12 தேரர்கள்

இலங்கையில் சர்வதேச அமைதி நடைப்பயணம்- அமெரிக்காவிலிருந்து வரும் 12 தேரர்கள்




– அநுராதபுரத்தில் தொடங்கி சுதந்திர சதுக்கம் வரை 7 நாட்கள் பயணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் அமைதிக்கான நடைப்பயணத்திற்கு அரச அனுசரணை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல், வண. மெல்பிட்டியே விமலகித்தி தேரர் தலைமையில் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் இந்த நடைப்பயணத்திற்காக, அமெரிக்க அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறுவனர் பஞ்ஞாகர தேரர் தலைமையிலான 12 தேரர்கள் இம்மாதம் 21ஆம் திகதி இந்நநாட்டிற்கு வருகை தரவுள்ளதுடன், ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 28ஆம் திகதி வரை ஏழு நாட்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர் இந்த அமைதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக ஆசிர்வாதம் பெற்ற பின்னர், இந்த நடைபயணத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன், ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றும் இந்த அமைதிக்கான நடைபயணத்தில் எடுத்துச் செல்லப்படவுள்ளது

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு முன்பாக நடைபெறும் விசேட மத வழிபாடுகளைத் தொடர்ந்து, அநுராதபுர மாவட்ட மக்களுக்கு அமைதிக்கான செய்தி முன்வைக்கப்படும்.

ஏப்ரல் 22 ஆம் திகதி காலை மீண்டும் தம்புள்ளை புனிதத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைப்பயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகண்ணாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கலை, மகர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.

அமைதிக்கான நடைப்பயணத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், கொண்டவரப்பட்ட ஸ்ரீ மகா போதியின் கன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இராஜதந்திர ரீதியாக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Clean Sri Lanka செயலகத்தின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்ளும் தேரர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்தல், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, Clean Sri Lanka செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஷ்வர, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் சிசிர அமரபந்து, ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments: