News Just In

3/23/2026 08:40:00 PM

பொத்துவில் கனகர் கிராம மக்களும் கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றமும்(SAFE )

பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட புதுமனைகள் திறப்புவிழா தொடர்பாக  இது வெளியிடப்படுகின்றது   



 பொத்துவில் கனகர் கிராம மக்களும் கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றமும் (SAFE )


மன்றத்தின் வரலாறு:
2025.03.10 காலை வெளிநாடொன்றிலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. கிழக்கு மாகாணத்தில் தூய குடிநீரின்றி அல்லலுறும் மக்களுக்கு நன்னீர்க் கிணறொன்றினை அமைத்து வழங்க விரும்புவதாக அழைப்பெடுத்தவர் கூறினார். கிணறு அமைக்கும் பணியினைப் பொறுப்பெடுத்து நிறைவேற்றித் தருமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.

கிணற்றினை அமைப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கித்துள் அம்பாறை மாவட்டத்தில் கண்ணகி கிராமம் மற்றும் கனகர் கிராமம் ஆகியன பரிந்துரைக்கப்பட்டன. இப்பணி தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளின் அடிப்படையில் 2025.03.31 அன்று பொத்துவில் கனகர் கிராமத்திற்குச் சென்று பார்வையிட்டோம்.




களப்பயணத்தினூடாக கனகர் கிராமத்தின் வரலாறு, மக்களின் துன்பங்கள், துயரங்கள் முதலியவற்றைப் பார்த்தும் கேட்டும் அறிந்துகொண்டோம். பிற்பாடு நாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும் புலம்பெயர்ந்து வாழும் எமதுறவுகள் பலருக்கும் அறிவித்தோம்; உதவிகளை எதிர்பார்த்தோம்.



கல்வி அபிவிருத்திச் சங்கம் ( (Education Development Society – EDS) ) என்ற பெயரில் கல்வி, குமுகாயப் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட நாம் 2022 ஆண்டு 04மாதம் 18ஆம்  நாள் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் குமுகாயப் பணிகளை முன்னெடுப்பதற்காக, கிழக்குக் குமுகாய மேம்பாட்டு மன்றம் (SOCIAL ADVANCEMENT FORUM – EAST, (SAFE) எனும் அமைப்பினைத் தோற்றுவித்தோம். ஒரு சில மாதங்கள் இயங்கிய இவ்வமைப்பு பின்னர் செயலிழந்தது. எனினும், இவ்வமைப்பின் தேவையை நன்குணர்ந்த நாம் 2025.04.01 இல் மீளமைப்புச் செய்தோம்; தொடர் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றோம்.


கனகர் கிராமப் பின்னணி:

பொத்துவில் 60 ஆம் கட்டைப் பகுதியே கனகர் கிராமம். சமுளை மரங்கள் நிறைந்த சோலையாகக் காட்சியளித்த இப்பகுதி 1950-1960 காலப்பகுதியில் காடு மக்களால் அழிக்கப்பட்டுச் சேனைப்பயிர்ச்செய்கைபண்ணப்பட்டது.
1960 – 1990 காலப்பகுதியில் ஏறக்குறைய 500 ஏக்கர் காணியில் 278 குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்ந்ததாகவும் ஒருவர் 3 – 5 ஏக்கர் வரை காணி வைத்திருந்ததாகவும் இவ்வூர் மக்கள் தெரியப்படுத்துகின்றனர்.

அக்காலத்தில் இப்பிரதேசத்தின் முதன்மை சாலை (Main road) இன் இரு மருங்கும் மக்கள் குடியிருந்தனர். 1981 ஆம் ஆண்டு காலத்தில் பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய எம்.சி. கனகரெத்தினம் அவர்கள், அரச அலுவலர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையூடாக கடன் அடிப்படையில் 30 வீடுகள் கிடைக்க உதவினார். அன்று தொடக்கம் இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரை நினைவுகொள்ளும் முகமாகக் கனகர் கிராமம் எனப் பெயர் சூட்டப்பட்டு அரச இதழில் (அரசாங்க வர்த்தமானி) வெளியிடப்பட்டது.

கனகர் கிராம அமைவிடம்:



பொத்துவில் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் பொத்துவில் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள நகரம். இங்கு மூவின மக்களும் வாழ்கின்றனர். இவர்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராகவும் அடுத்து தமிழரும் அதனையடுத்து சிங்களவரும் காணப்படுகின்றனர்.

பொத்துவில் நகரின் வடக்கே திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவும் கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கு, மேற்கு திசைகளில் லாகுகல பிரதேச செயலகப் பிரிவும் அமைந்துள்ளது.



பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவு 63 சிறிய கிராமங்களை தன்னகத்தே கொண்டுள்ளதோடு இவற்றின் நிர்வாகம் 27 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 1958 இற்கு முன் இப்பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. 1958 இல் உருவாக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்துடன் பொத்துவில் பிரதேசம் இணைக்கப்பட்டது.

265 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் 42908 (2024 – கணக்கெடுப்பு) மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 80.26ம% ஆன 34440 முஸ்லீம்களும் 17.60ம% ஆன 7584 தமிழர்களும் 1.8ம% ஆன 788 சிங்களவர்களும் உள்ளனர்.






பொத்துவில் நகரின் அடிப்படையான பொருளாதாரமாக காணப்படுவது விவசாயமாகும். அத்துடன் விலங்கு வேளாண்மை, கரையோர மற்றும் நடுத்தர வியாபாரம், சுற்றுலா வர்த்தகம் போன்றனவும் காணப்படுகிறது. இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதுடன் அழகிய காடு, மகிழ்வைத் தரக்கூடிய கடற்கரை, ரம்மியமான மலைகள், குளிர்மையான நீர்த்தேக்கங்கள் இந்த நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. உலகிலே நீர்ச்சறுக்கல் விளையாட்டுக்கு பிரசித்தமான அறுகம்குடா இந்நகரிலே காணப்படுகிறது. அறுகம்குடாவை அண்டிய உல்லை கடற்கரையும் காணப்படுகிறது. இந்த பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவே கனகர் கிராமமாகும்.



கனகர் கிராமமானது மேற்கே பொத்துவில் - அக்கரைப்பற்று நெடுஞ்சாலையையும் கிழக்கே வங்காள விரிகுடாவையும் தெற்கே ஊறனியையும் வடக்கே கோமாரியையும் கொண்ட பிரதேசமாகும். 1990ம் ஆண்டு காலப் பகுதியில் பிரதான வீதியை ஒட்டி 30 கல்வீட்டு குடியிருப்புக்களும் கரையோரப் பகுதியையொட்டி ஏறத்தாழ 50 குடியிருப்புக்களும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வேளையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வரையான காணிகள் உரிமம் உடையதாக இருந்தது. இக்காணியில் குடியிருப்பு வீட்டுப்பகுதி போக ஏனைய பகுதியில் இவர்கள் மேட்டு நிலப் பயிர்களை செய்து தமது பொருளாதாரத்தை தேடிக்கொண்டனர்.

மக்களின் இடம்பெயர்வு:
ஆயுதப் போராட்டம் உச்சம்பெற்ற காலத்தில் இருநது 1990 வரையிலான காலப்பகுதியில் கனகர் கிராம பிரதான பாதையில் மூன்று பெரிய தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பிரதான வீதிக்கு அண்மையில் காணப்பட்ட கல்வீட்டு குடியிருப்பாளர்கள் மெதுவாக இடம்பெயரத் தொடங்கினர். இந்நிலையில் 01.06.1990 அன்று பொத்துவில் பொலிஸ் நிலையம் தமிழ் ஆயுததாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கனகர் கிராமம் மற்றும் அதன் அயல் கிராமமான ஊறணி என்பவற்றில் புகுந்த இராணுவமும், முஸ்லீம் ஊர்காவல் படையும் மக்களின் வீடுகளுக்கு தீயிட்டதுடன் பலரை படுகொலையும் செய்தனர். இதன் காரணமாக இக்கிராம மக்கள் தனது அயல் கிராமமான கோமாரி, திருக்கோவில் ஆகிய கிராமங்களுக்கு இடம்பெயர மற்றொரு பகுதியினர் பொத்துவில் மெதடிஸ்த மிஷன் கல்லூரியில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.







23.06.1990 அன்று பொத்துவில் மெதடிஸ்த மிஷன் கல்லூரியில் அமைந்த அகதிகள் முகாமில் நுழைந்த பொலிசார் விசாரணைக்கென 21 பேரை அழைத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து பிறிதொரு நாளில் அகதிகள் முகாமில் நுழைந்த விசேட அதிரடிப்படையினரும் முஸ்லீம் ஆயுததாரிகளும் 250 பேரை விசாரணைக்கென அழைத்துச் சென்றனர். இன்றுவரை இந்த 271 பேரும் வீடு திரும்பவில்லை. இந்த மக்கள் காணாமல் ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட பீதி காரணமாக கனகர் கிராமத்தையும், ஊறனியையும் விட்டு மக்கள் முற்றாக வெளியேறினர்.


நிலமீட்பு போராட்டம்:
1990ம் ஆண்டு தொடக்கம் 2015 வரையான கால்நூற்றாண்டு காலப்பகுதியில் அயல் கிராமங்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்த கனகர் கிராம மக்களின் குடும்ப எண்ணிக்கை அதிகரித்தது. உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இடம்பெயர்ந்த மக்கள் ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டபோதும் கனகர் கிராம மக்களை குடியமர்த்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. 2015 இல் மக்கள் தமது கனகர் கிராமத்தில் குடியேற முயற்சித்தபோது வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா திணைக்களம் மற்றும் இராணுவம் மக்களுக்கு தடையாக இருந்தனர்.





2021ம் ஆண்டில் 85 குடும்பங்களைச் சேர்ந்த கனகர் கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.




இதன் காரணாக 11.11.2023 அன்று கனகர் கிராமத்தில் குடியமர 73 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் தாம் வாழ்ந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படாமல் பிரதான வீதியை அண்டியதாக குடியமர அனுதிக்கப்பட்டனர். இந்த மக்கள் 1990 காலப்பகுதியில் ஒவ்வொருவருக்கும் மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வரையான காணிக்கு உரிமை கொண்டாடியபோதும் சகலருக்கும் வீடு அமைக்க 20 பேர்ச் நிலமும் பயிர்ச்செய்கைக்கு ஒரு ஏக்கர் 20 பேர்ச் காணி புதிய சூழலில் வழங்கப்பட்டது.

மீள்குடியேற்றம்:
73 குடும்பங்கள் மீள்குடியமர வழங்கப்பட்ட பகுதி மேட்டு நிலமாக காணப்படுவதால் தமது காணியில் நீரைப்பெற 150 அடிக்குமேல் நிலத்தை துளையிட வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு தோண்டினாலும் நீர் குடித்தலுக்கு பொருத்தமாக இருக்குமா? என்ற சந்தேகமும் காணப்படுகிறது. இந்த மீள்குடியேறிய மக்கள் 3km  அப்பால் சென்று குடிநீரை தற்போது பெற்றுவருவதை அவதானிக்கமுடிகிறது. இதுமட்டுமன்றி காட்டு யானைகளின் நடமாட்டம் தாராளமாக இங்கு காணப்படுகிறது.

கனகர் கிராமத்தில்தமிழ்மக்களுக்குகாணிகள்பகிர்ந்தளிக்கப்படும்போது முஸ்லீம் மக்களுக்கும் இங்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என முஸ்லீம் அரசியல்வாதிகளும் மற்றும் சில முஸ்லீம் அதிகாரிகளும் வலியுறுத்தி வருவதாக இப்பிரதேச சமூக ஆர்வலர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.


கனகர் கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்களில் அதிக அளவினர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வதால் தமக்குரிய குடிமனைகளை அமைக்க நிதிவளமற்று காணப்படுகின்றனர். .


SAFE நிறுவனத்தால் கனகர் கிராத்தில் கடந்த ஓராண்டில் பூர்த்திசெய்யப்பட்ட பணிகள்:
01. குடிநீர்:
கனகர் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கென வழங்கப்பட்ட நிலப்பகுதியில் மிக கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை காணப்படுகின்றது. தரையில் குறிப்பிட்ட ஆழத்திற்கு அப்பால் கற்பாறைகள் தொடர்ந்து காணப்படுவதால் ஆழமான குழாய் கிணறுகளையே அமைக்கவேண்டியுள்ளது. இதற்காக பெருந்தொகைப் பணத்தை செலவிடவேண்டியுள்ளதால் வசதிகுன்றிய இம்மக்கள் தமது குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய 3km இற்கு அப்பால் உள்ள அயல் கிராமத்தின் இருந்து நீரைப்பெற்று வருகின்றனர். 

கனகர் கிராமத்தில் முதலாவது குடிநீர்க் கிணறொன்றை அமைக்கும் பணி 12.05.2025 அன்று எமது நிறுவனத்தினால் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்டது. ஏழு நாட்கள் நடந்த போராட்டத்தின் பின் பக்க நீர் ஊற்றின் மூலம் 30 அடி ஆழத்தில் நீர்பெறப்பட்டது. இதற்கான நிதி அனுசரனை 780,000.00 ரூபாவினை யாழ் நல்லூர் நாயன்மார்கட்டு இராமலிங்கம் இராசையா, இராசையா தனலெட்சுமி ஆகியோரின் ஞாபகார்த்தமாக திரு, திருமதி இராசையா குகதாசன், குகதாசன் கஜரூபன் குடும்பத்தினர் வழங்கினர். 15.06.2025 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக இது கனகர் கிராம மக்களிடம் வழங்கப்பட்டது. 1990 மக்கள் இடம்பெயர்வுக்குப் பின் கனகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட முதலாவது நீர் கிணறு இதுவாகும்.



நீர்க்கிணறு அமைக்கப்பட்டபோதும் அதன் மூலம் மக்கள் உச்ச பயனை அடையமுடியாமல் போனது. நீரில் காணப்பட்ட சிறிதளவான உவர்த்தன்மை, கிணறு வற்றிப்போதல் என்பன பிரதான காரணிகளாகும். இதன் காரணமாக கண்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிலத்தடி நீரியல் நிபுணர்களின் வழிகாட்டுதலில் 12.07.2025 அன்று தூய குடிநீரை பெறுவதற்கு ஆழ்துளை குழாய் கிணறை அமைக்க கூடிய இடமொன்று இனங்காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து 07.10.2025 அன்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு 165 அடி ஆழத்தில் தூயநீர் இனங்காணப்பட்டது. இதற்கான நிதி உதவி ஐக்கிய உலகத்தமிழர் நடுவகத்தின் மூலம் செல்லையா தம்பிராசா , தம்பிராசா இராசாங்கம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக தம்பிராசா வர்ணகுமார், வர்ணகுமார் சத்தியபாமா அவர்களால் 580,000.00 ரூபா வழங்கப்பட்டது.


மின்சாரம் அற்ற பகுதியில் ஆழ்துளைக்கிணற்றில் இருந்து நீரை வெளிக்கொணர 2.3 மில்லியன் ரூபா செலவில் நீர் விநியோகத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல அவுஸ்திரேலிய மக்கள் நலன் காப்பகம் முன்வந்தது. 15.11.2025 இல் ஆரம்பிக்கப்பட்ட நீர்த்தாங்கி பணிகள் நிறைவுபெற்று 15.01.2026 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக கனகர் கிராம மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்மூலம் குடிநீருக்காக 3km இற்கு அப்பால் உள்ள அயல்கிராமத்திற்கு சென்று நீர் எடுத்துவரும் கனகர் கிராம மக்களின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. மேற்படி திட்டத்திற்கு அவுஸ்திரேலிய மக்கள் நலன் காப்பகம் மூலம் பின்வருவோர் நிதி உதவி வழங்கினர்.
1. முகுந்தன் பேரின்பநாதன்         
2. திருமதி. பாரதி அஜந்தன்         
3. திரு. லோகநாதன் தெய்வானைப்பிள்ளை
4. திரு. குமரன்
5. திரு. மணி
6. திரு. இதயராஜா புவனம்
7. திரு. பிரியதர்சன் ஜெயகாந்தன்
8. திரு. டைட்டிஸ் மோகன்
9. திரு. தீபன் தருமலிங்கம்
10. திருமதி. எவின்டா எமிலியன்ஸ்
11. திரு. விஜயகுமார் சண்முகநாதன்
12. திருமதி. அனுஜா அகஸ்டின்
13. திரு. கிருஸ்ரி அன்டனி
14. திருமதி. இலங்கேஸ்வரி முருகவேல்
15. திருமதி. ஜயந்தி சகாபெருமாள்
16. செல்வன். தருன் கார்த்தி
17. திரு. நிலவன் பாஸ்கரன்
18. திரு. பரம்சோதி கந்தையா
19. செல்வி. கிறிஸ்டினா ராஜ்குமார் தியாகராஜா
20. திருமதி. ஸ்ரீதேவி அய்யப்பன்


02. மக்களின் தேவைகளை அரச அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச்சென்றமை:
உள்நாட்டு யுத்த பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மீளமர அனுமதிக்கப்பட்டனர். மீள்குடியமர அனுதிக்கப்பட்ட கனகர் கிராம மக்கள் ஆண்டு இரண்டு கடந்தும் அங்கு நிலையான வீடுகளை அமைத்து குடியிருப்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. இதற்கு பிரதான காரணியாக அவர்களின் குடும்ப வருமானம் காணப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக மக்களுடன் பல தடைவ உரையாடி மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லஎமது மன்றம் தீர்மானித்தது.


25.05.2025 அன்று அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு சென்ற எமது குழு திட்டமிடல் பணிப்பாளரைக்கண்டு கனகர் கிராம விடயம் தொடர்பாக உரையாடியது. மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளருடனான எமது உரையாடல் திருப்தியாகவும் நம்பிக்கையூட்டத்தக்கதாகவும் இருந்தது. திட்டமிடல் பணிப்பாளரின் வழிகாட்டுதலுக்கு அமைய 07.07.2025 அன்று பொத்துவில் பிரதேச செயலக அதிகாரியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டோம். அரச அதிகாரிகளின் நம்பிக்கையூட்டும் சந்திப்பின் பின் அம்பாரை மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுடன் மேற்படி விடயம் தொடர்பாக உரையாடலை மேற்கொண்டோம்.

03. குடிமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு:
மாவட்ட செயலக அதிகாரி, பொத்துவில் பிரதேச செயலாளர், கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருடன் மேற்கொண்ட உரையாடல்கள் காரணமாக 06.08.2025ம் திகதி இடப்பட்ட கடிதம் மூலம் மாவட்ட செயலகம் கனகர் கிராமத்தில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட 73 பேரில் ஐவருக்கு குடினைகள் அமைக்க நிதி உதவி வழங்கியது. இவற்றுள் மூன்று வீடுகள் 340 சதுரஅடி பரப்பு கொண்டதும் ஏனைய இரண்டும் 550 சதுரஅடி பரப்பும் கொண்டது.

340 சதுரஅடி பரப்புகொண்ட வீட்டின் உத்தேச மதிப்பீட்டு செலவு 1,825,000.00 ரூபா ஆக காணப்பட்டபோதும் அரசு அதற்காக பயனாளிக்கு 900,000.00 ரூபா மட்டுமே வழங்கியது. மீதி 925,000.00 பயனாளி இட்டு கட்டமைப்பு பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இவ்வாறே 550 சதுரஅடி பரப்புக்கான வீட்டின் உத்தேச மதிப்பீடு 2,545,000.00 ரூபா ஆக காணப்பட்டபோதும் அரசு பயனாளிகளுக்கு 1,500,000.00 மட்டுமே வழங்கியது. மீதி 1,045,000.00 ரூபாவை பயனாளி இட்டு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மேற்படி நிபந்தனையின்கீழ் வீடுகளைப்பெற்ற எந்த பயனாளிகளும் வீடுகளை அமைக்க திரானியற்று காணப்பட்டனர்.

04. நிதி வழங்குனரின் உதவி:


வீடுகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகளின் கோரிக்கைக்கு அமைய நீண்ட காலத்தில் மீள செலுத்தும் வட்டியற்ற கடன் அடிப்படையில் உதவுமாறு DR. சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதிய காப்பாளரின் கவனத்திற்கு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) மூலம் கோரிக்கை விடுத்தோம். எமது கோரிக்கையை ஏற்று வீட்டின் கட்டமைப்பு மாறாமல் மிக உறுதியான வீட்டினை அமைக்க சிந்திக்குமாறு DR. சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதிய காப்பாளர் திரு . சதாசிவம் மங்களேஸ்வரன் அவர்கள் கேட்டுக்கொண்டார். இவரின் ஆலோசனைக்கமைய 340 சதுரஅடி வீட்டை 2,650,782.00 ரூபா உத்தேச செலவிலும் 550 சதுரஅடி வீட்டை 3,171,960.00 ரூபா உத்தேச செலவிலும் அமைக்க எமது நிதி வழங்குனர் முன்வந்தார். பயனாளிகளின் ஒப்புதலுடன் வீடமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக நிதி வழங்குனோரின் ஆலோசனையின் போரில் 550 சதுரஅடி பரப்புக்கொண்ட மேலும் ஒரு வீடும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 



10.09.2025 அன்று ஆறு வீடுகளுக்குமான அத்திவாரக்கல் இடப்பட்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. நீர்த்தட்டுப்பாடு, மின்சாரம் இன்மை, தொழிலாளருக்கான தங்குமிடமின்மை, வனவிலங்குகளின் அச்சுறுத்தல், உள்ளக போக்குவரத்து இன்மை, பருவமழை என்பவற்றுக்கு முகங்கொடுத்து ஆறு வீடுகளையும் மூன்றுமாத இடைவெளியில் அமைத்து வழங்கிய எந்திரி M.மங்களேஸ்வரன் அவர்களின் பணி மகத்தானது. திரு. மங்களேஸ்வரன் அவர்களின் கடமையுணர்வையும் சமூகப்பற்றையும் கண்டு எமது மன்றம் பெருமகிழ்வுகொள்கிறது.



வீடுகளின்  பரப்பளவு

எண்அரசின் உத்தேச மதிப்பீடுசெலவிட்ட தொகைஅரச நிதிநிதி வழங்குனர் வழங்கிய  உதவி

340 சதுர அடி

03

1,825,000.00

2,650,782.00900,000.001,750,782.00 x  3

550 சதுர அடி

022,545,000.003,171,960.001,500,000.001,671,960.00 x 2
550 சதுர அடி01-3,171,960.00

-

3,171,960.00 x  1

மொத்தம் 

11,768,226.00





05. உட்பாதைகள் நிர்மாணிப்பு:


கனகர் கிராமத்தின் போக்குவரத்து உட்பாதைகள் சிலவற்றை சீர்படுத்துவதற்கான பணிகள் 04.03.2026 மற்றும் 05.03.2026 ஆகிய தினங்களில் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது. 2km தூரமான உட்பாதை இயந்திர உபகரணச் செலவாக 108,000.00 ரூபா DR. சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியம் வழங்கியது.

06. எமது எதிர்பார்ப்பு:
காலம் பல கடந்தும் கனவான கனகர் கிராம மக்களின் தேவைகள் சிலவற்றை DR. சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியம், அவுஸ்திரேலிய மக்கள் நலன் காப்பகம், ஐக்கிய உலகத் தமிழியல் நடுவகம் என்ற அமைப்புகள் மூலம் முன்னெடுத்துள்ளோம். இருப்பினும் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தின் தேவைகள் மிகப்பெரியது. இவற்றை இம்மக்கள் காலக்கிரமத்தில் பெற பாராளுன்ற உறுப்பினர்களையும் அரச அதிகாரிகளும் உதவ வேண்டும் என எதிர்பார்த்து நிற்கின்றோம்.


நன்றியுடன் 
கிழக்கு - குமுகாய மேம்பாட்டு மன்றம் 
(SAFE)
சின்னத்துரை தேவசிங்கன் 

No comments: