News Just In

3/29/2026 11:56:00 AM

அமெரிக்காவை குலுங்க வைத்த... ட்ரம்பிற்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவை குலுங்க வைத்த... ட்ரம்பிற்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டங்கள்



பல மில்லியன் மக்கள் கலந்துகொண்ட No Kings ஆர்ப்பாட்டங்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான போர், நாடு தழுவிய குடியேற்ற அமலாக்கம் மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திணித்துள்ள கொள்கைகளுக்கு எதிராகத் தாங்கள் போராடுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்ரம்ப் ஒரு கொடுங்கோலனைப் போல எங்களை ஆள விரும்புகிறார். ஆனால் இது அமெரிக்கா; அதிகாரம் மக்களிடமே உள்ளது. மேலும், தங்களை அரசர்களாகக் கற்பனை செய்துகொள்பவர்களிடமோ அல்லது அவர்களின் கோடீஸ்வர கூட்டாளிகளிடமோ ஆட்சி அதிகாரங்கள் வழங்கப்படவில்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டமானது, நியூயார்க், வாஷிங்டன் டி.சி. மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் ஏறக்குறைய அனைத்து முக்கிய நகரங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் டி.சி.யின் மையப்பகுதித் தெருக்கள் பிற்பகல் முழுவதும் பேரணிகளால் நிறைந்திருந்தன; நாட்டின் தலைநகர் வழியாக மக்கள் திரள் திரளாகப் பேரணியாகச் சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் லிங்கன் நினைவிடத்தின் படிக்கட்டுகளில் அணிவகுத்து நின்றனர்; நேஷனல் மாலும் நிரம்பி வழிந்தது.

முன்னர் நடந்த No Kings ஆர்ப்பாட்டங்கள் போலவே தற்போதும் போராட்டக்காரர்கள் ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த பிற அதிகாரிகளின் உருவ பொம்மைகளை ஏந்திப்பிடித்து, அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் கைது செய்யவும் வலியுறுத்தினர்.

ஆயிரக்கணக்கானோர் நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்திலும் திரண்டு, மன்ஹாட்டனின் மிட் டவுன் பகுதி வழியாகப் பேரணியாகச் சென்றனர்.

கூட்டத்திற்கு வழிவிடுவதற்காக, வழக்கமாக பரபரப்பாக இருக்கும் தெருக்களைக் காவல்துறையினர் மூட வேண்டியிருந்தது. அக்டோபர் மாதத்தில் நடந்த No Kings ஆர்ப்பாட்டங்களில், நகரத்தின் ஐந்து மண்டலங்களிலும் சேர்த்து 100,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்தது.
7 மில்லியன் மக்கள்

ஆர்ப்பாட்டத்தின் நடுவே லாஸ் ஏஞ்சல்ஸில், ஃபெடரல் சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தாக்கியதற்காக இருவர் கைது செய்யப்பட்டனர். டல்லாஸில், எதிர் போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து No Kings பேரணியைத் தடுத்தபோது சிறிய அளவிலான கைகலப்புகள் வெடித்ததைத் தொடர்ந்து, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட No Kings பேரணிகளில் நாடு முழுவதும் 7 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். ஜனவரி 2025-இல் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததிலிருந்து, ட்ரம்ப் தனது அதிகாரத்தின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளார்; ஃபெடரல் அரசாங்கத்தின் சில பகுதிகளைக் கலைக்க நிர்வாக ஆணைகளைப் பயன்படுத்தியதுடன், மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நகரங்களுக்குத் தேசியக் காவல்படை வீரர்களை அனுப்பியுள்ளார்.

அமெரிக்கா மட்டுமின்றி, பாரிஸ், லண்டன் மற்றும் லிஸ்பன் ஆகிய நகரங்களில் வசிக்கும் அமெரிக்க மக்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அங்குப் பலர், ஜனாதிபதி ட்ரம்பை ஒரு பாசிசவாதி மற்றும் போர்க்குற்றவாளி என்றும் குறிப்பிட்டு பதாகைகளை ஏந்தியவாறு, அவரைப் பதவி நீக்கம் செய்து வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments: