நாட்டில் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
“ரட்டம எகட்ட தேசிய செயற்பாடு” திட்டத்துடன் இணைந்து “அகன்று செல்” என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் செவ்வாய்க்கிழமை (03) இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். றினோசா அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் பரவலாக காணப்படும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்கும் நோக்கில் “போதைப்பொருள் அற்ற நாடு – மகிழ்ச்சியான நாளை” மற்றும் “அகன்று செல், முழு நாடுமே ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ் “விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” என அறிவித்து தேசிய அளவில் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வில் வளவாளராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைப்பாளர் எம்.எம்.ஜி.எம். றசாட் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் உதவி பிரதேச செயலாளர் என்.எப். அய்மா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிர்வாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். றசாக், நிர்வாக கிராம உத்தியோகத்தர் கே.எம்.என். குமார மற்றும் இறக்காமம் பொலிஸ் நிலையம் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக சமூதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலயத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அதிதிகளால் முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இந்த தேசிய செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அவற்றில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சமூகத்தை போதைப்பொருளுக்கு எதிராக வலுப்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
No comments: