News Just In

3/17/2026 05:13:00 AM

அரச ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே வேலை' குறித்து அரசாங்கம் ஆராய்வு

அரச ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே வேலை' குறித்து அரசாங்கம் ஆராய்வு


நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு மீண்டும் 'வீட்டிலிருந்தே வேலை செய்யும்' முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான விரைவான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

16ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, இது குறித்து ஒரு தீர்க்கமான கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உலகளாவிய பதற்றங்களால் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கையாள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முன்மொழிவின் கீழ் அமைக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு நேற்று மீண்டும் கூடியது. இக்குழுவின் தலைவரும், நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில்,

'மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் நமது உள்நாட்டு பொருளாதாரத்தின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றார்.

No comments: