News Just In

3/18/2026 03:28:00 PM

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் பரப்பளவில் அதிகம் கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக இருப்பதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டம் நெல், காய்கறி மற்றும் பல்வேறு பயிர்ச் செய்கைகளில் முக்கிய பங்காற்றும் விவசாய மையமாக விளங்குகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழுமையாக விவசாயத்தை சார்ந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய வாராந்த 75 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறையில் விவசாய பணிகளை சீராக மேற்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்தில் உழவு, விதைப்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட அடிப்படை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் 20 லீட்டர் எரிபொருள் தேவையாகும். பெரும்பாலான விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் செய்கை மேற்கொள்வதால், அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு மிகக் குறைவாக இருப்பது காரணமாக உழவு நடவடிக்கைகள் தாமதமடைவதுடன், உற்பத்தி குறையும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதனிடையே, குறிப்பாக உழவு இயந்திரங்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது விவசாய பணிகளை தடையின்றி மேற்கொள்ள உதவும் என்றும், பயிர்ச் செய்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய நடைமுறையின்படி உழவு இயந்திரங்களை கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இது சாலைகளில் விபத்துகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் மற்றும் பிற வாகன பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற குறுகிய சாலைகளில் இத்தகைய வாகனங்கள் இயக்கப்படுவது பெரும் சிரமங்களையும் அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.

எனவே, விவசாயிகளுக்கு கலன்களில் (containers) எரிபொருள் வழங்கும் நடைமுறையை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான சரியான கண்காணிப்பு மற்றும் விநியோக முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய காலப்பகுதி முக்கியமான பயிர்ச் செய்கை பருவமாக இருப்பதால், இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் உணவுத் தயாரிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விவசாயிகளின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும் உடனடி தீர்வுகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனால், ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு, விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

No comments: