News Just In

3/10/2026 04:15:00 PM

பாராளுமன்றத்தை மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்ற அதிக பங்கேற்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடரும்

 பாராளுமன்றத்தை மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாற்ற அதிக பங்கேற்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடரும்.இரா. சாணக்கியன்.



வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம் ஆகிய அடிப்படைகளின் மூலம் பாராளுமன்றத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை இந்தக் குழு தொடர்ந்து மேற்கொள்ளும். இரா. சாணக்கியன்.


பாராளுமன்றத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்க “Open Parliament” குழுவின் இருநாள் பயிற்சி முகாம்.


பாராளுமன்றத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகவும் மாற்றும் நோக்கில் செயல்படும் “Open Parliament Initiative” பாராளுமன்றக் குழுவின் உறுப்பினர்களுக்கான இரு நாள் குடியிருப்பு பயிற்சி முகாம் மார்ச் 06 மற்றும் 07 ஆகிய தேதிகளில் களுத்துறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.


Westminster Foundation for Democracy (WFD) மற்றும் Coalition for Inclusive Impact (CII) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் குழுவின் இணைத் தலைவர்களான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும், பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாமின் போது “Open Parliament Initiative” குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் மற்றும் துறை நிபுணர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


இதன்போது திறந்த அரசு (Open Government) மற்றும் திறந்த பாராளுமன்றம் (Open Parliament) தொடர்பான கருத்துகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. தேசிய ஆலோசகரான அன்ஜலினா ஹெர்மன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம் ஆகிய அடிப்படை கோட்பாடுகளை மையமாகக் கொண்டு பாராளுமன்றத்தை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் உலகின் பல நாடுகளில் “Open Parliament” நடைமுறைப்படுத்தப்பட்ட விதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


அத்துடன் பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகமான ஹன்ச அபேரத்ன, 2015 ஆம் ஆண்டு முதல் இந்த குழு உருவாக்கப்பட்டதிலிருந்து பாராளுமன்றத்தை மக்களுடன் மேலும் நெருக்கமாக இணைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.


மேலும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமை சட்ட அதிகாரியான காயனி பிரேமதிலகா, உள்ளூராட்சி நிறுவனங்களின் குழு முறைமை மற்றும் அவற்றில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு அமர்வொன்றை நடத்தியார்.


இந்த பயிற்சி முகாம் வளநிலை நிபுணர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே அறிவு மற்றும் அனுபவப் பகிர்வை ஏற்படுத்தியதுடன், எதிர்கால நடவடிக்கைகளுக்கான செயற்பாட்டு வழிகாட்டி மற்றும் மூலோபாய செயல் திட்டம் உருவாக்குவதற்கும் வழிவகுத்தது.


மேலும் Westminster Foundation for Democracy அமைப்பின் இலங்கை நாட்டுப் பணிப்பாளர் சஞ்சே விக்னராஜா மற்றும் Coalition for Inclusive Impact அமைப்பின் திட்ட மற்றும் ஆட்சி நிபுணர் திலஷீனி அங்குனவெல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments: