News Just In

3/27/2026 11:41:00 AM

இலங்கையில் மேலும் தீவிரமடையும் வெப்பம்; இந்த அறிகுறிகள் தென்படின் உடன் மருத்துவரை நாடுமாறு எச்சரிக்கை

இலங்கையில் மேலும் தீவிரமடையும் வெப்பம்; இந்த அறிகுறிகள் தென்படின் உடன் மருத்துவரை நாடுமாறு எச்சரிக்கை



இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இது தொடர்பான முக்கிய வழிகாட்டல்களை வழங்கினார்.

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதாலும், உலகளாவிய காலநிலை மாற்றங்களினாலும் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த நிலைமை உச்சத்தை எட்டும் என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கப் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது:

முற்பகல் 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, அத்தியாவசிய தேவைகளின்றி இந்த நேரத்தில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவும்.

வெப்பத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வெள்ளை அல்லது இளநிறத்திலான ஆடைகளை அணியுங்கள். வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவது அவசியம்.

உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க அதிகளவு நீர் அருந்த வேண்டும். சாதாரண நீருடன் ஜீவனி அல்லது உப்பு கலந்த திரவ ஆகாரங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
தற்போது பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் குறித்து அதிக அவதானம் தேவைப்படுகிறது.

நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் மாணவர்களுக்குத் தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது மயக்க நிலை தென்படின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

விளையாட்டு நிகழ்வுகளைத் திட்டமிடும் போது முறையான மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துவது பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற நீண்டகால நோய்களுக்காகச் சிகிச்சை பெறுபவர்கள் இந்த வெப்பநிலையால் எளிதில் பாதிக்கப்படலாம். எனவே, இவர்களின் ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: