News Just In

3/09/2026 03:48:00 PM

இளையோரும் மூத்தோரும் இணைந்து பயணிக்கின்ற சமூகத்தில் முன்னேற்றம் இருக்கும்

இளையோரும் மூத்தோரும் இணைந்து பயணிக்கின்ற சமூகத்தில் முன்னேற்றம் இருக்கும்
சட்டத்தரணி அன்பழகன் குரூஸ்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஒரு சமூகத்திலுள்ள அனுபவஸ்தர்களான மூத்தோரும் வெளி உலகத்தைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளையோரும் ஆகிய இந்த இரு சாராரும் இணைந்து பயணிக்கின்றபோதுதான் அந்த சமூகத்தில் நிலைபேறான அபிவிருத்தியும், மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும் என உள்ளுராட்சிமன்ற முன்னாள் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும், கலை இலக்கியவாதியும், எழுத்தாளரும், சட்டத்தரணியுமான அன்பழகன் குரூஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் 3ஏ சன சமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித றமழான் நோன்பு துறக்கும் இப்தார், அத்துடன் பாராட்டு நிகழ்வுகளில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தின் தலைவரும் மாவட்டச் செயலக தலைமையகப் புள்ளி விவரவியல் உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். றூமி தலைமையில் நிகழ்வு ஏறாவூரில் இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அன்பழகன் குரூஸ், ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையம் தனது முன்மாதிரியான செயற்பாடுகளைக் காண்பிக்கிறது. இதிலே மூத்தோரும் இளையோரும் இணைந்து சமூகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அனுபவஸ்தர்;களும் பதவி நிலைகளிலுள்ளவர்களுமாகச் சேர்ந்து இங்கே ஒரு சன சமூக நிலையத்தை இயக்கிக் கொண்டிருக்க, எதிர்காலத் தலைவர்களான இளையோர் இங்கே எல்லா செயல்பாடுகளிலும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரு சாராரும் சேர்ந்து பயணிப்பது சிறப்பானது. இது சமூக வளர்ச்சிக்குச் சிறந்ததொரு முன்மாதிரியாக இருக்கும். அத்துடன் இது அந்த சமூகம் முன்னேறுவதற்கான நல்ல அறிகுறியாகவும் இருக்கும். தனிமனித ஆளுமையை விருத்தி செய்வதற்கு இதை விடச் சிறந்த களம் ஏதுமில்லை. சமூகம்தான் சிறந்த பள்ளிக்கூடம், சமூகம்தான் ஒரு கலாசாலை, சமூகத்திலிருந்து கற்றுக் கொள்வதுதான் சிறந்த படிப்பாகும். அதிலிருந்து அந்த சமூகத்தைக் கட்டியமைக்கலாம்” என்றார்.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். ஹமீம், மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ. முஹம்மத் ஆஸாத், உள்ளிட்ட இன்னும் அநேக அதிகாரிகளும், பிரதேச சன சமூக நிலையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரதேசத்தில் பணியாற்றி இடமாற்றலாகிச் சென்ற கிராம அலுவலர் எம்.ஐ.ஏ. அஸ்லம், அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.ரீ. ஜவாஹிர் ஆகியோருக்கு சேவைப் பாராட்டும் வழங்கப்பட்டது

No comments: