News Just In

3/06/2026 06:11:00 AM

ஈஸ்டர் தாக்குதலில் 3ஆம் சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சாலி!

ஈஸ்டர் தாக்குதலில் 3ஆம் சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சாலி
- சனல் 4 வெளிப்படுத்தல்களை தொடர்ந்து CID நடவடிக்கை





2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலி மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டதோடு, தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்கதலுக்குச் சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் துணை நின்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு (வழக்கு இலக்கம்: B/35882/24) அறிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவின் ‘சனல் 4’ (Channel 4) ஊடகம் வெளியிட்ட ‘Sri Lanka’s Easter Bombing Dispatches’ என்ற ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தில், தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள், கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டத்தரணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரமின்மையை ஏற்படுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக சனல் 4 ஊடகம் விவரித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரான சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முன்னாள் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய ஹன்சீர் அசாட் மௌலானா இந்த ஆவணப்படத்தில் மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார்.

இத்தாக்குதலானது ஓரிரு நாட்களில் திட்டமிடப்பட்டதல்ல எனவும், சுமார் இரண்டு முதல் மூன்று வருடங்களாக ஒரு குழுவைத் தெரிவு செய்து பாரிய திட்டமிடலின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறிய ஹன்சீர் அசாட் மௌலானா, இந்தத் தாக்குதல் குறித்துத் தன்னிடத்தில் மறுக்க முடியாத சான்றுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிள்ளையானின் ஆலோசனையின் பேரில், தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான சைனி ஹாஷிம் மௌலவி உள்ளிட்ட மத அடிப்படைவாதக் கைதிகள் குழுவொன்றைத் தான் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

குறித்த குழுவினர் பிள்ளையானுக்குப் பயனுள்ளவர்களாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு, பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணி ஒருவரை ஒழுங்கு செய்து அவர்கள் பிணையில் விடுதலையாகத் தான் உதவியதாக மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு குறித்துப் புலனாய்வு செய்த முன்னாள் சி.ஐ.டி அதிகாரி நிஷாந்த சில்வாவும் இந்த ஆவணப்படத்தில் கருத்துத் தெரிவிக்கையில், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தன்னை அழைத்து, குறித்த கொலை வழக்கில் ஏன் தனது பெயரைச் சந்தேகநபராக நீதிமன்றில் முன்வைத்தீர்கள் என வினவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சுரேஷ் சாலி மற்றும் சிறையிலிருந்து விடுதலையான அடிப்படைவாதக் குழுவினருக்கு இடையே சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் தனக்குப் பணிப்புரை விடுத்ததாக மௌலானா வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணத்தின் கரடிப்பூவல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் அமைந்துள்ள வீடொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அங்கு ஸஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆறு பேர் வெள்ளை வேனில் வந்து சுரேஷ் சாலியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த நீண்ட நேரச் சந்திப்பிற்குப் பின்னர் சுரேஷ் சாலி தன்னிடம் பேசுகையில், ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டுமானால் நாட்டில் ஒரு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்ததாகவும் மௌலானா கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு இதுவே ஒரே வழி என சலே குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸஹ்ரான் ஹாஷிமின் குழுவினர் 2018 இல் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸாரைக் கொன்றமை மற்றும் 2019 இல் தென்னந்தோப்பில் வெடிபொருட்களைச் சேமித்திருந்தமை போன்ற தகவல்களையும் இந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட இடம் சுரேஷ் சாலி மற்றும் சஹ்ரான் குழுவினர் சந்தித்த அதே இடமாகும் என மௌலானா அடையாளம் கண்டுள்ளார். இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்தியப் புலனாய்வுத் துறை இது குறித்து எச்சரித்திருந்ததாகச் சனல் 4 தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடைபெற்ற தினமான 2019 ஏப்ரல் 21 அன்று காலை, சுரேஷ் சாலியிடமிருந்து தனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாக மௌலானா குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருக்கும் ஒருவரை உடனடியாக வாகனத்தில் ஏற்றிச் சென்று அவர் விரும்பும் இடத்தில் விடுமாறு சாலி பணித்ததாகவும், தான் அப்போது மட்டக்களப்பில் இருந்ததால் அங்கு செல்ல முடியவில்லை எனவும் மௌலானா கூறியுள்ளார்.

தாக்குதல் நடைபெற்ற தினத்தன்று காலை 8.50 மணியளவில், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்யாமல் அங்கிருந்து வெளியேறிய ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததை சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த நபர் மௌலானாவிடம் அழைத்துச் செல்லச் சொல்லப்பட்ட நபராக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எவ்வாறாயினும், சுரேஷ் சாலி இந்தச் சாடல்களை முற்றாக மறுத்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் தான் மலேசியாவிலும், தாக்குதல் நடைபெற்ற போது இந்தியாவிலும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிள்ளையான், மௌலானா குறிப்பிடும் காலப்பகுதியில் தான் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சிறையில் இருந்ததாகவும், வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காகவே மௌலானா இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்

No comments: