News Just In

3/09/2026 07:09:00 AM

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் முதன்முறையாக பட்டத்தை தக்கவைத்தும், 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்
முதன்முறையாக பட்டத்தை தக்கவைத்தும், 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை



 ஐடிடி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளரான கோல் மெக்கோன்ஜி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது.

20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், இஷான் கிஷன் 25 பந்துகளில் தலா 4 சிக்ஸர், பவுண்டரிகளுடன் 54 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18, சூர்யகுமார் யாதவ் 0, திலக் வர்மா 8, ஷிவம் துபே 26 ரன்கள் எடுத்தனர்.

2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்தனர். ஃபின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17, ஜேம்ஸ் நீஷம் 8 ரன்களில் நடையை கட்டினர்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பீல்டிங்கின்போது இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டு 3 கேட்ச்களை பிடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.

டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துஅணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன. பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது. ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments: