News Just In

2/02/2026 08:33:00 AM

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று போராட்டம் - அணிதிரளுமாறு அழைப்பு

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று போராட்டம் - அணிதிரளுமாறு அழைப்பு



அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா - நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை நகர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வன்னி மாவட்ட பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீரை இலகுவாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் - மகாவலி எல் வலயத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக நிலப் பகுதிகள் பெருமளவில் பறிபோகும் என்பதுடன் குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலும் திட்டமிட்டமுறையில் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

2011ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் எதிர்ப்புகள் மற்றும் நிதிப் பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில், இந்தத் திட்டத்தை 2 ஆயிரத்து 350 கோடி ரூபாவில் செயற்படுத்தத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ் இனப் பரம்பலைச் சிதைக்கும் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக அனைவரும் இன்று வவுனியா - நெடுங்கேணியில் அணிதிரள வேண்டும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

"படிப்படியாக நாங்கள் காணிகளை இழந்து வருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் பெரியளவு காணிகள் இழக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திலும் இந்த விடயம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது - நடக்கின்றது.

அனைத்து தமிழ் மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அரசுக்கு எமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்." - என்றார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கரிநாள் போராட்டங்களிலும் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

No comments: