நாடாளுமன்ற தேர்தலில் பிஎன்பி கட்சி வெற்றி: வங்கதேச பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

வங்கதேசத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இதில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 300 இடங்களைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சுமார் 17 ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
தாரிக் ரஹ்மானின் தந்தை ஜியாவுர் ரஹ்மான் ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் பிஎன்பி கட்சியை தொடங்கி 1977-ல் வங்கதேச அதிபராக பொறுப்பேற்றார். 1981-ல் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த பதவியில் இருந்தார். பின்னர் அவரது மனைவி கலிதா ஜியா வங்கதேச பிரதமராகவும் பிஎன்பி கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1991 முதல் 1996 வரையும் மற்றும் 2001 முதல் 2006 வரையும் கலிதா ஜியா பிரதமராக இருந்த காலகட்டத்தில் மகன் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார். முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பதால்தான் நிழல் பிரதமர் என்று பொருள்படும் வகையில் அவரை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ‘டார்க் பிரின்ஸ்’ என்று அழைத்தன.
2007-ல் ராணுவ புரட்சி ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த தாரிக் ரஹ்மான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார். பிரிட்டனிலேயே தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலிதா ஜியா உயிரிழந்தபோது வங்கதேசம் திரும்பினார்.
தாயின் மறைவுக்குப் பின் பிஎன்பி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ரஹ்மான் மூன்று மாதங்களில் அக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர உள்ளார். ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இருந்தும் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments: