News Just In

2/18/2026 05:23:00 PM

‘மொட்டு’ கட்சி சட்டத்தரணிக்கு 10 ஆண்டுகள் சிறை - போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் காணி மோசடி

‘மொட்டு’ கட்சி சட்டத்தரணிக்கு 10 ஆண்டுகள் சிறை
- போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் காணி மோசடி





26 போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்ததாக சுமத்தப்பட்ட 26 வழக்குகளில், ஒரு வழக்கின் தீர்ப்பை இன்று (18) அறிவித்த சிலாபம் மேல் நீதிமன்றம், சட்டத்தரணி ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்க இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.

இதில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவரில் சட்டத்தரணி அலெக்ஸ் நிஷாந்த பெனாண்டோக்கு 3 குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்டதோடு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 1 இலட்சம் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 8 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும் மற்றொரு நபரான சமன் குமாரவுக்கும் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 8 இலட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07 ஆம் திகதி, 3 ஏக்கர் 2 ரூட் மற்றும் 24 பேர்ச்சஸ் நிலப்பரப்பைக் கொண்ட 2 காணித் துண்டுகளை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, 2021 இல் சட்டமா அதிபரினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட சட்டத்தரணி அலெக்ஸ் நிஷாந்த பெனாண்டோ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) புத்தளம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிப்பவர்.

அத்துடன், அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: