
இலங்கைக்கு சமீபத்தில் தொழிலதிபர் டட்லி சிறிசேனவால் இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரோய்ஸ் மொடல் காருக்கு ரூ.70 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான ஊடக செய்திகளுக்கு இலங்கை சுங்கத் துறை சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட சுங்க இயக்குநர் சந்தன புஞ்சிஹேவா,
சுங்க மீறல்கள் தொடர்பான தகவல்களை வெளி தரப்பினருக்கு வழங்குவதின் சட்டபூர்வத் தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சட்ட ஆலோசனை கிடைக்கும் வரை, அபராதங்கள் மற்றும் விசாரணைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க முடியாது என்றும் சுங்கத் துறை அறிவித்துள்ளது.
அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரோய்ஸ் காரின் உண்மையான விவரங்கள் துல்லியமாக அறிவிக்கப்படாததன் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் வழக்கமான ரோல்ஸ் ரோய்ஸ் பேண்டம் மொடலாக அறிவிக்கப்பட்டு, வரி உட்பட அதன் மதிப்பு 417,000 பிரித்தானிய பவுண்டுகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சுங்க ஆய்வில் அது அதிக மதிப்பும் அளவும் கொண்ட வாகனம் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த வாகனம் ரோல்ஸ் ரோய்ஸ் பேண்டம் ஆட்டோ EWB (Extended Wheelbase – நீண்ட வீல்பேஸ்) எனும் சிறப்பு மொடல் என்றும், அதன் உண்மையான மதிப்பு வரி உட்பட சுமார் 479,000 பிரித்தானிய பவுண்டுகள் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொடல் மற்றும் மதிப்பில் ஏற்பட்ட இந்த வேறுபாட்டின் காரணமாக ரூ.70 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக ரூ.370 மில்லியன் சுங்கத் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாகனம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரபரப்பு எழுந்த நிலையில்,தொழிலதிபர் டட்லி சிறிசேன விளக்கம் அளித்துள்ளார்.
தான் நேரடியாக வாகனத்தை இறக்குமதி செய்யவில்லை என்றும், சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இறக்குமதியாளரிடமிருந்து அந்த வாகனத்தை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் சரியான மொடலை குறிப்பிடத் தவறியதன் காரணமாக இறக்குமதியாளர் அபராதம் செலுத்தியதாகவும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொண்டதாகவும் அவர் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments: