News Just In

11/21/2025 08:14:00 AM

திருகோணமலை மாவட்ட எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் -சபையில் எதிர்க்கட்சி எம்.பி இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்ட எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்
-சபையில் எதிர்க்கட்சி எம்.பி இம்ரான் மஹ்ரூப்





திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் பிரதேச எல்லை பிரச்சினை இனங்களுக்கு மத்தியில் முறுகல் நிலை ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் இந்த எல்லைகளை அடையாளப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி இம்ரான் மஹ்ரூப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தது உரையாற்றிய அவர்,

திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் பிரதேச எல்லை பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த எல்லை பிரச்சினை காரணமாக இனங்களுக்கு மத்தியில் முறுகல் நிலை ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது. அதனால் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இந்த எல்லைகளை அடையாளப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருகோணமலை மாவட்டம் மூவின மக்கள் வாழும் மாவட்டமாகும். அங்கு தற்போது இனவாத பிரச்சினைகளை தூண்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதனால் இந்த எல்லைப் பிரச்சினையும் அதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது. அதேபோன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் வாழும் மக்கள் சனத்தொகையை கருத்திற்கொண்டு, அந்த பிரதேச செயலகத்தை இரண்டு பிரதேச செயலகமாக மாற்றி, அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று மூதூர் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் திருகோணமலை நகரசபையில் மாத்திரமே தீயணைப்புப்படை காணப்படுகிறது. அதனால் கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், கந்தளாய் போன்ற பகுதிகளில் தீ அனர்த்த சம்பவம் ஏற்படுகின்றபோது, திருகோணமலை மாநகரசபையிலிருந்து தீயணைப்பு படை வருவதற்குள், அங்கு பாதிப்பு அதிகமாக அமைந்துவிடும்.

அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, இந்த பிரதேசங்களை மையப்படுத்தி கிண்ணியா நகர சபையில் தீயணைப்புப் பிரிவொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments: