சகல உறுப்பினர்களையும் இணைத்து எதுவித புறக்கணிப்புகளும் இல்லாமல் மக்கள் பணியை சபையின் தவிசாளர் முன்னெடுக்க வேண்டும். மிகவும் வருமானம் குறைந்த சபையாக உள்ள எமது நாவிதன்வெளிப் பிரதேச சபையை எமது பதவிக்காலத்தில் சிறந்த முறையில் நிர்வகித்து வருமானம் கூடிய சபையாகவும் அனைத்து வளங்களும் உடைய சபையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் நளீர் தெரிவித்தார்.
இன்று சபா மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில் கன்னியரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர், பலம் பொருந்திய இரு முஸ்லிம் கட்சிகளை விட கூடுதலான வாக்குகளை எனது தலைமையிலான கால்பந்து சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை குழு ஒன்றிற்கு வழங்கி அதனுடாக இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை இச்சபைக்கு அனுப்பிய நாவிதன்வெளிப் பிரதேச மக்களுக்கு எனது நன்றியை தெரிவிப்பதுடன் இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது சக வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்டதொரு இடைவெளிக்குப் பின் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பணி நோக்கிய பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள நாவிதன்வெளிப் பிரதேச சபைக்கு தெரிவாகி இங்கே வீற்றிருக்கும் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் கட்சி, இன, மத பேதங்களை மறந்து தவிசாளருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என உறுதி அளிப்பதுடன் இதுபோன்று தவிசாளர் அவர்களும் கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு இச்சபையில் இருக்கும் 13 கௌரவ உறுப்பினர்களையும் இணைத்து எதுவித புறக்கணிப்புகளும் இல்லாமல் மக்கள் பணியை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தவிசாளர் அவர்கள் இச்சபையில் உள்ள 13 உறுப்பினர்களையும் இணைத்து ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலமாக எமது மக்களுக்கு தடங்கல்கள் இன்றி உரிய சேவைகளை உரிய காலத்தில் வழங்க முடியும் என்பதை இச்சவையில் வலியுறுத்த விரும்புகின்றேன் என்பதுடன் இச்சபையானது இன நல்லுறவுக்கு ஒரு எடுத்துக்காட்டான சபையாக மாற்ற வேண்டியது இங்கிருக்கும் அனைவரினதும் கடமையாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் அதிகாரம், பணபலம் பொருந்திய இரு பெரும் முஸ்லிம் கட்சிகளை விடவும் எனது தலைமையிலான அணிக்கு அதிக வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி முஸ்லிம் மக்களின் குரலாக செயல்படுவேன் என்றும் எனது அரசியல் செயற்பாட்டின் ஊடாக இப்பிரதேசத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் நியாயபூர்வமான உரிமைகளை மதித்து நடப்பேன் என்றும் இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவேன் என்றும் இச்சபையில் உறுதியளிக்கின்றேன்.
எமது சபையில் இருக்கும் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன், விட்டுக்கொடுப்போடு இணைந்து செயல்பட வேண்டும் எனவும் இச்சபையைக் கேட்டுக் கொள்கின்றேன். என்றார்
No comments: