News Just In

5/20/2025 06:34:00 PM

கொல்லப்பட்ட ஆ யிரக்கணக்கான எம் உறவுகளுக்கான நீதி வேண்டும்.!இரா சாணக்கியன்

கொல்லப்பட்ட ஆ யிரக்கணக்கான எம் உறவுகளுக்கான நீதி வேண்டும். இன்றையதினம் பாராளுமன்றத்தில் 20.05.2025.



கடந்த வாரம் உங்களுக்கு தெரியும். இந்த நாட்டிலே ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வாரம். முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்ற வாரம். 16 ஆண்டுகளுக்கு முன்னர் மிக முக்கியமாக இறுதி போரின் போது ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட வாரம் தான் கடந்த வாரம். அவ்வாறு கொல்லப்பட்ட மக்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், கொல்லப்பட்ட மக்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்பார்க்கும் நீதி இன அழிப்புக்கான நீதியை இதுவரைக்கும் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தர மறுத்திருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் அது நடக்கும் அந்த நீதி கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த நாட்டில் நடைபெற்றது ஒரு இன அழிப்பு. ஆனால் அதனை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிப்பது கடினம் என்று சிலர் கூறிய கருத்துக்களை வைத்துக் கொண்டு நாட்டிலே இன அழிப்பு நடக்கவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த நாம் கூறுவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டில் நடைபெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக சர்வதேச ரீதியாகவும் சரி உள்நாட்டிற்குள்ளும் சரி இதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரதானமான கட்சி இலங்கை தமிழரசு கட்சி தான். அதை மக்களின் சார்பாக நின்று தொடர்ச்சியாக நாம் செய்வோம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் கடந்த வாரத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரு அரசியல் பின்னணி இன்றி தாமாக முள்ளிவாய்க்காலில் ஒன்று சேர்ந்து இருந்தார்கள்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்பட்டது. இதெல்லாம் அரசியல் பின்னணியில் நடந்த விடயங்கள் அல்ல. எங்களுடைய மக்கள் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை நீங்கள் மறுக்க முடியாது. அண்மையில் கனடாவில் இன அழிப்பு சம்பந்தமாக ஒரு சின்னம் உருவாக்கப்பட்ட போது, எமது வெளிவிவகார அமைச்சர் கனடா தூதுவரை அழைத்து பெரிய ஒரு விளக்கம் கொடுத்திருந்ததை நான் பார்த்திருந்தேன். ஆனால் நடக்க வேண்டியது என்ன? இந்த நாட்டிலே தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு இலங்கை அரசாங்கம் பிழை செய்யவில்லை என நீங்களும் இந்த அரசாங்கமும், அந்த காலப்பகுதியில் இந்த அரசாங்கம் இருக்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தவர்களை இந்த அரசாங்கமும் பாதுகாக்க நினைக்கின்றார்கள் என்றால் அது வேறு விடயம். ஆனால் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிடும் இந்த அரசாங்கம், உண்மையில் அந்த குற்றங்களை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என நினைத்தால் இந்த விடயத்திற்கு ஒத்துழைப்பை வழங்கலாம். விசாரணைகளை ஆரம்பிக்கலாம். ஆனால் உள்நாட்டு விசாரணையும் இல்லை. சர்வதேச விசாரணையும் இல்லை. தொடர்ச்சியாக தமிழ் மக்கள் நீதி இல்லாத நிலைக்கு தள்ளப்படுவது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது.

நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நேற்றைய தினம் யுத்த வெற்றியை கொண்டாடுவற்கு சென்றிருந்தார். இந்த நாட்டிலே கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்று 18ஆம் திகதி தங்களுடைய மக்கள் ஒன்றாக சேர்ந்து கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் ஜனாதிபதி 19ஆம் திகதி போரினுடைய வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில் இருக்கின்றார். அவ்வாறாயின் இதிலிருந்து மிக தெளிவாக தெரிகிறது. தமிழர் தேசம். தமிழ் மக்கள். தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரதானமான கட்சியான நாங்கள் தமிழ் மக்களுடன் இருக்கின்றோம். ஆனால் இச்த அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை போன்றே வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். தமிழர் தேசம். தமிழ் மக்கள். தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் இருக்கின்றோம். இந்த நாட்டில் இராணுவத்தை பாதுகாக்க வேண்டும். போர் குற்றங்கள் நடைபெறவில்லை. கடந்த அரசாங்கங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என்பது மிக உறுதியாக தெரிகிறது. அந்தவகையில் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலும் தமிழ் மக்கள் அந்த விடயத்தை சரியாக செய்வார்கள்.

உங்களுடைய அரசாங்கத்தின் கீழ் எங்களுடைய ஒட்டுமொத்த இன பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்க முடியா விட்டாலும் கூட எமது தமிழ் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியாது போனாலும் கூட, எங்களுடைய மக்கள் அன்றாடம் முகம் கொடுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன. யானை வேலிகளை அடைத்தல். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் கடந்த ஒரு மாதத்தில் வவுணதீவில் ஒருவர் யானை அடித்து உயிரிழந்தது. தாங்காமலை போன்ற எல்லை பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அந்தவகையில் அதற்கும் தீர்வில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.

நாட்டின் ஜனாதிபதி நேற்று ஆற்றிய உரையில், இறுதி போரில் வீரர்கள் கொல்லப்பட்டமைக்காக தெற்கிலுள்ள தாய்மார்கள் கவலை அடைவது போன்றே, இறுதி யுத்தத்தில் தமது சொந்தங்களை இழந்த வடக்கு கிழக்கின் தாய்மார்களும் கவலை கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். அது உண்மையில் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு கூற்றாகும். போர் நினைவு நாளோ அல்லது வெற்றி கொண்டாட்டமோ அங்கு வைத்து ஆற்றிய உரையில் ஒட்டுமொத்த இலங்கையருக்குமான ஒரு நாளை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அது வரவு செலவுதிட்ட உரையிலும் காணப்படுகிறது. அனைத்து இலங்கையர்களும் ஒன்றுகூடி கொண்டாட ஒரு புதிய நாள் ஒதுக்கப்பட உள்ளதாக. ஆனால் அந்த நிகழ்வை தற்போது தவிர்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், 18ஆம் திகதி தங்களுடைய மக்கள் ஒன்றாக சேர்ந்து கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதனை நினைவுகூர்கின்றனர். ஆனால் நாட்டின் ஜனாதிபதி 19ஆம் திகதி போரினுடைய வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சியில்; கலந்துக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து தமிழ் தேசத்திற்கும், சிங்கள தேசத்திற்குமான வேறுபாடு நன்றாக புலப்படுகிறது. எனவே போலியான இலங்கையர்களுக்கான தினம் என்பதை உருவாக்குவதில் நிதியை வீணடிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கூறுங்கள்.

அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பு செய்த விடயம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எமது கட்சியினுடைய செயலாளருமான சுமந்திரன் அவர்கள் அவரது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் பிரிவு 4இன் கீழ் 28.03.2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் தொடர் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக 18.05.2025ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதம் மூலமாக காணி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் தமது உரித்து சம்பந்தமாக எவரும் உரிமை கோராது விட்டால் அந்த காணி அரசு காணி என்று கட்டாயம் பிரகடனம் செய்ய வேண்டும் என்று இச்சட்டத்தின் பிரிவு 5.1 கூறுகின்றது. ஆகவே, குறித்த வர்த்தமானி மீள கைவாங்கப்பட்டால் மாத்திரமே இந்த விடயம் தீர்க்கப்படலாம். அதாவது இன்று காலை அமைச்சர், பிரதமர் அனைவரும் தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் அபகரிப்பு செய்வதை நிறுத்தியுள்ளது என ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். ஆனால் அந்த வர்த்தமானி மீளப் பெறும் வரையில் அந்த வர்த்தமானி அவ்வாறே செல்லபடியாகும் என்பதை எங்களுடைய ஜனாதிபதி சட்டத்தரணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. ஆகவே இந்த வர்த்தமானியை நீங்கள் மீளப் பெறாது விட்டால் தமிழ் மக்களின் காணிகளை நீங்கள் அபகரிப்பு செய்ய போகின்றீர்கள் என்பது உறுதியான ஒரு விடயம். எனவே நாடகங்களை நிறுத்திவிட்டு, தமிழ் மக்களுடைய காணிகளை நீங்கள் கட்டாயமாக எங்களுடைய இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டு இந்த நாட்டிலே அடி வாங்கி நாட்டை விட்டு வெளியில் சென்றவர்களுக்கு நீங்கள் வழங்கி இருக்கின்ற காலப்பகுதிக்குள் வந்து இந்த காணி எமது காணி என்று கூற முடியாது போனால் அந்த காணி அரசுக்கு உரிமையாகும். எனவே இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் நான் இந்த இடத்தில் கூறிக் கொள்கிறேன்.

அதேபோல தான் இந்த தேர்தல் வெற்றிகள் குறித்தும் ஓரிரு விடயங்களை கூற வேண்டும். ஜனாதிபதி அவர்கள் எங்கேயோ நிகழ்த்திய உரை ஒன்றின் போது குறிப்பிட்டார், ஜனாதிபதி ஆவதற்கு முன்னதாகவா அல்லது பின்னரா என்று தெரியவில்லை. கடந்த அரசாங்க காலப்பகுதிகளில் மாவட்டங்களில் நடந்து செல்ல முடியாது. எம்மில் வந்து மோதிச் செல்லும் அளவுக்கு அமைச்சர்கள் காணப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த தேர்தல் காலப் பகுதியில் எமக்கு வடக்கு கிழக்கில் வீதியில் இறங்கிச் செல்ல முடியவில்லை. அவ்வளவு அமைச்சர்கள் காணப்பட்டனர். பிரதி அமைச்சர் என்கின்றனர். அமைச்சரவை அமைச்சர் என்கின்றனர். எமக்கு யார் என்றும் தெரியவில்லை. ஏனெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக. இந்த அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவித்ததன் பின்னர் நாட்டில் வேறு எந்த வேலையும் நடைபெற்று இருக்காது போன்று. அமைச்சர்கள் அனைவரும் வீதியில் தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதியும் வீதியில். பிரதமரும் வீதியில். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திலும் எந்த வேலையிலும் நடைபெற்றிருக்காது. பிரதமர் அலுவலகத்திலும் எந்த வேலையும் நடைபெற்று இருக்காது என்று நான் நினைக்கின்றேன். தேர்தல் விதிகளை மீறி வாக்குறுதிகளை வழங்கினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் தேர்தல் விதிகளை மீறியது தேசிய மக்கள் சக்தி. பதிவில் உள்ளது. நானும் புகார் அளித்துள்ளேன். எனவே மிகத் தெளிவான தீர்ப்பை நாட்டு மக்கள் வழங்கி உள்ளனர். விசேடமாக வடக்கு கிழக்கில் தமிழர் பெரும்பான்மை உள்ள பகுதியில் ஒரு பிரதேச சபையை நிறுவுவதற்கு முடியாது. ஒரு பிரதேச சபையிலும் வெற்றி பெறவில்லை. எனவே மக்கள் மிகவும் தெளிவான ஒரு தகவலை வழங்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் மாத்திரம் இல்லை. இலங்கையில் தெற்கிலும் அவ்வாறு தான். எனக்கு நினைவிருக்கிறது, கடந்த அரசாங்க காலப்பகுதியில் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். மொட்டு கட்சி தான் மிகவும் குறுகிய காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களையும் வெற்றி கொண்ட கட்சி என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியபடி பார்த்தால், இந்த அரசாங்கத்திலும் ஒரு பீ.ஆர். இருக்கின்றார். இந்த பீ.ஆர்.இனுடைய கதையும் அப்படி தான் இருந்தது. ஆனால் இவர் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த பீ.ஆர். குறைந்தது தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களை வெற்றி பெற்றார். ஆனால் இந்த பீ.ஆர். இரண்டுடன் வெளியே. முதலாவதில் வடக்கு கிழக்கு எப்படியும் இல்லை. அடுத்ததில் வெளியேற்றம். 68 இலட்சம் பெற்ற வாக்குகள் 40 இலட்சத்திற்கு குறைவடைந்துள்ளது. நான் பீ.ஆர். என்றவுடன் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் தெரியும் யார் இந்த பீ.ஆர். என்று. பீ.ஆர். சாபம். இந்த நாட்டிற்கு பீ.ஆர். சாபம் பட்டுள்ளது.

இன்று நாட்டில் 45 இற்கும் அதிகமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நீதி அமைச்சர் இருக்கின்றார். பாதுகாப்பு அமைச்சர் இருக்கின்றார். இந்த சம்பவங்களை இலகுவாக மூடி மறைக்க முடியாது. யார் இறந்தாலும், நாட்டில் யார் வேண்டுமானாலும் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு செல்லக்கூடிய ஒரு நிலைமை தான் தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர். அரசாங்கத்துடன் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதமையினாலேயே விமர்சிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். அகங்கார போக்கை நிறுத்திக் கொண்டு தோல்வியை பொறுப்பேற்றுக் கொண்டு வாருங்கள்.
இந்த நாட்டின் முன்னோக்கிய பயணத்தை முன்னெடுத்து செல்வதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு நான்கு நான்கரை வருடங்கள் உள்ளன. ஜனாதிபதிக்கு அதனைவிட குறைந்த காலமொன்று காணப்படுகிறது. இந்த அரசாங்கத்துடன் மோதலை ஏற்படுத்த நாம் முயலவில்லை. சரியான பாதைக்கு கொண்டு வரவே நாம் முயல்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள அரசாங்கத்தில் ஒரு நிரந்தர தீர்வை பெறவே நாமும் முயல்கின்றோம். ஆனால் அதனை செய்ய விரும்பாது இவ்வாறு அகங்கார பாணியில் பயணிப்பது தான் அரசாங்கத்தின் போக்காக இருப்பின் நான்கு ஆண்டுகளை கடக்க முடியாது. இவ்வாறே தொடர்ந்தால் இந்த அரசாங்கம் வீழ்ச்சியை சந்திக்கும். அரசாங்கத்தின் போக்கு இதுவாகத்தான் இருப்பின் எமக்கும் விமர்சிப்பதை தவிர வேறு வழியில்லை. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு 75 பில்லியன் அபிவிருத்தி நிதியை கொண்டு வர நாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளோம். இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். ஆனால் அகங்கார போக்கை கைவிட்டு தோல்வியை பொறுப்பேற்று சாதாரண மக்களாக வாருங்கள்.

No comments: