மட்டக்களப்பில் மண் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்படும், புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும், விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் கவனம்.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்
சமீபத்திய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் வண்ணம் மாவட்ட நிருவாகம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்; கலந்தாலோசனையில் ஈடுபடும் சந்திப்பு திங்களன்று 02.12.2024 மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகாவின் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமச்சந்திரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், இ. சிறிநாத், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். நளிம், ஆகியோர் பிரசன்னமாகியிருக்க, கூடவே அனைத்து திணைக்கள, கூட்டுத்தாபன அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
சமீபத்திய கன மழை, பெருவெள்ளப் பாதிப்பிற்குப் பின்னர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு அபிவிருத்திச் செயற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.
மேலும், சமீபத்திய சீரற்ற காலநிலையினால் உண்டான கனமழை பெருவெள்ளப் பாதிப்புக்களைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வைத் தற்காலிகமாக நிறுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மட்டடக்ளப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பௌதீகப் பாதிப்புகளைக் கருத்திற் கொண்டு அவராலேயே இந்தத் ஆலோசனை முன்மொழியப்பட்டதற்கிணங்க அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பதுளை வீதிப் பகுதியிலிருந்து மண் அகழ்வது முற்றுமுழுவதுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கனமழை பெருவெள்ளத்தினால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பினாலும் கூட பல உட்கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தாமதிக்காது புனரமைப்புச் செய்ய வேண்டும், என்பதுடன் மேலும், இடராயத்த முன்னேற்பாடுகள் பற்றியும் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
No comments: