இன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள்.
தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று (27) உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயார் நிலையில் உள்ளது.
வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன.
இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.
இதேவேளை, போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதியும் இல்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு அறிவித்துள்ளது.
"வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றும் புதிய அரசு மேலும் தெரிவித்துள்ளது
No comments: