முக்கிய வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு - சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவித்தல்
யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மன்னம்பிட்டிய சந்தி வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது.அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா - அலைகல்லு போட்ட குளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மாளிகை குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை, சேமமடு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால்,
அப்பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் தாழமுக்கம் காரணமாக வெள்ள நீர் காரைதீவு கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
நேற்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்பே திடீரென மழை நீர் உற்புகுந்துள்ளதால் அரச உத்தியோகஸ்தர்கள் கடமை முடிந்து வீடு திரும்புவது கஷ்டமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
காரைதீவு பிரதான வீதியில் இருக்கும் காரைதீவுப் பிரதேச செயலகம் தபாற் கந்தோர் ஆலயங்கள் முற்றாகப் பாதிக்கப்ட்டுள்ளது.
11/27/2024 11:20:00 AM
முக்கிய வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு - சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவித்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: