News Just In

11/25/2024 11:55:00 AM

. கதிர்காமரை இனவாத குப்பைத் தொட்டியில் விசியது போல அல்லாமல், அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்கினால் முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சரவை தேவையில்லை!

 கதிர்காமரை இனவாத குப்பைத் தொட்டியில் விசியது போல அல்லாமல், அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்கினால் முஸ்லிம் சமூகத்திற்கு அமைச்சரவை தேவையில்லை!


நூருல் ஹுதா உமர்

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி பல தேர்தல் சாதனைகளைச் சாதித்துள்ளது. அதற்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதுடன் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் டி.எஸ்.சேனாநாயக்க முதல் ரணில் விக்கிரமசிங்க வரையிலான காலத்தில் நிறுவப்பட்ட அமைச்சரவையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தது. மட்டுமின்றி கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்திருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திலும் கூட முஸ்லிம்  பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனாலும் இனவாதம் இல்லாத ஆட்சியை உருவாக்கப்போவதாக கூறிவரும் ஜனாதிபதி அநுர வின் மறுமலர்ச்சி அரசாங்கத்தில் அவ்வாறான முஸ்லிம் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லை. இது இந்த அரசாங்கத்தின் ஒரு குறையாக உள்ளது என்பதில் நாம் மிகவும் வருந்துகிறோம் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இந்த கவலை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அல்லது வாக்களிக்காத அனைத்து இலங்கையர்களிடமும் இருக்கிறது. முஸ்லிங்கள் இல்லாத அமைச்சரவை நியமனம் எனும் சாதனையை அனுரகுமார அரசின் வரலாற்று சாதனை பதிவுப் புத்தகத்தில் சேர்க்க எண்ணுவது பிழையான எண்ணமாகும் இதனை முஸ்லிம் சமூகம் சார்பில் எங்களின் அதிருப்தியை வெளியிடுகிறேன்

அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர், ஆளுநர்கள், முதலமைச்சர், நகர முதல்வர், பிரதி முதல்வர், தூதுவர், ஆணையாளர்கள், பணிப்பாளர்கள், செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் போன்ற பதவிகள் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் தகைமைகள் அல்லது அரசியல் நியமனங்களின் அடிப்படையில் காலம் காலமாக வழங்கப்பட்டு அல்லது வழங்கப்படாத சந்தர்ப்பங்கள் ஏராளமாக இருந்த போதிலும், அப்பதவிகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் அதுபற்றி ஆழமாக கவலை படாவிட்டாலும் இப்போது அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கு சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள அதிர்வலையையும், கவலையையும் ஆழமாக புரிந்து கொள்ளுமாறு அநுர அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் அமைச்சரவையில் அங்கம் வகிக்காதது அவ்வளவு இலகுவில் கடந்து  செல்ல முடியாத கடினமான கசப்பான உண்மையாகும். சுதந்திரப் போராட்டத்தின் முஸ்லிம் முன்னோடிகள் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்துக்கும், பங்களிப்புக்கும் கிடைத்த பாரம்பரிய சலுகை அல்லது பரிசு அல்லது வரம்தான் அமைச்சரவை அந்தஸ்து.  இது 1947 சுதந்திரப் போரின் முன்னோடி டி.பி. ஜாயா முதல் 2022 ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அல்ஹாபிழ் இஸட்.நசீர் அஹமட் வரையிலான 75 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தொடர் வரலாறாகும்.

தேசிய மக்கள் சக்தி என்பது இனவாதத்திக்கு முற்றுப்புள்ளி அல்லது முடிவுரை கட்டிய ஒரு வரலாற்று அரசியல் சக்தியாகும். அதாவது வடக்கில் யாழ்ப்பாணம், கிழக்கில் கல்முனை, மலையகம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்ட பிரிவினைவாத அரசியல் சித்தாந்தம் தலைகீழாக புரட்டி சிதறடிக்கப்பட்ட ஒரு சக்தியாகும். அத்தகைய சக்தியில், எதிர்காலத்தில் யாழ்ப்பாணம், கல்முனை, மஸ்கெலியா மாநகர சபைகளுக்கு இலங்கையர் என்ற தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருத்தமான தோழர்களுக்கு எதிர்காலத்தில் மக்கள் தொகை விகிதாசாரத்தை கருதாமல்,  நகர முதல்வராக்கும் அடித்தளத்தை அமைப்பது மாத்திரம் அல்ல, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பதவிகளை இன அடிப்படையில் வழங்காமல், பொருத்தமான இலங்கைப் பிரஜைக்கு மேற்படி பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

இனவாத, பிரிவினைவாதத்திற்கு எதிராக, பெற்ற மக்கள் ஆணையும் மக்களின் இலட்சியவாதத்தையும் நீங்கள் அமுல்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும், தேசிய மக்கள் சக்தி முழுநேர அரசியல், தொழில்முறை திறன் மூலம், கடந்த காலத்தின் படிப்பினைகளிலிருந்து, நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்காக திட்டமிட்டு முடிவுகளை எடுக்கும் அரசியல் சக்தியாகும். அதில், தகுதி வாய்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரை முன்கூட்டியே தயார் படுத்தி வைக்கமால் செய்ய தவறியது ஒரு முக்கிய தவறு மற்றும் புறக்கணிப்பாகும். முடிந்தால் இந்த தவறை திருத்தியமைத்து வருங்கால இலங்கை தேசத்தின் நலனுக்காக அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் இனவாதத்திற்கு எதிரான இவ்வாறானதொரு சக்தி இனவாதமான முடிவு எடுக்காது. என்றாலும்  எதிர்காலத்தில் இனவாத பிரிவுகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் முடிவை தவறான முன்னுதாரணமாக அமையலாம் அல்லது கருதலாம் என்று இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த காலத்தில் சில முஸ்லிம் வர்த்தக அரசியல் வியாபாரத் தலைவர்களால் நடந்ததாகக் கூறப்படுகின்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் மோசடிகள் அல்லது ஊழல் மற்றும் மோசடி அரசாங்கங்களைப் பாதுகாத்ததற்காக இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தை தண்டிக்காமல், குற்றவாளிகளை தண்டித்து ஜனாதிபதி கூறியதை போல சட்டம் எல்லோருக்கும் மேலே உள்ளது என்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

நாடு சுதந்திரம் பெறும்போது  இனவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் இருக்காது. தமிழ் தலைவர்களுடன் இணைந்து 50/50 என்ற கோட்பாட்டை ரீ.பி. ஜாயா, சேர் ராசிக் பரீத் போன்றவர்கள் கேட்காமல், இலங்கை குடியுரிமைக்காக இனவாதம் மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிராக இருந்தது போல இந்த நாட்டிலிருந்து இனவாதத்தை ஒழிப்பதற்காக, தற்போது எழுந்துள்ள மறுமலர்ச்சிக்காக, வரலாற்று ரீதியாக தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் பாரம்பரியமாக பெற்று வந்த அமைச்சரவை அமைச்சு பிரதிநிதித்துவத்தை உரித்துடையது. இந்த வரலாற்று தியாகத்தை செய்ய, இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் இலங்கை தேசமாக தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

அவ்வாறான அர்ப்பணிப்பின் மூலம் உருவாகின்ற புதிய இலங்கை தேசத்தில், தகுதியானவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும் ஏனென்றால் அப்துல் கலாம் போன்றோர்களை இந்தியா ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது போல இலங்கையிலும் உருவாக்க முடியும். இல்லை என்றால், வரலாற்றில் கதிர்காமரை இனவெறியர்கள்  குப்பையில் வீசுயது போன்று முஸ்லிம் சமூகத்தையும் வீசினால் இத்தகைய தியாகங்கள், காலத்தின் மாற்றம் பிழையான உதாரணங்களை வெளிக்காட்டும்.

மேலும் தேசிய மக்கள் சக்தி, தோற்கடிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதில்லை என்பது கொள்கையாக இருந்தாலும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வன்னி மற்றும் திகாமடுல்லை க்கான இன அடிப்படையில் வழங்கப்பட்டது குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை, யதார்த்த அரசியலை தேசிய மக்கள் சக்தி உணர்ந்து செயற்பட்டு வருவது  புலனாகிறது. மேலும் ஜனாதிபதி அனுர மதிக்கும் சகோதரர் மார்ட்டின் லூதர் கிங்கின் அமுத மொழியான  "இருற்றால் இருளை அகற்ற முடியாது. ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பால் வெறுப்பை ஒழிக்க முடியாது. அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்."

ஆகையால்தான் பார்வையற்ற சகோதரர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக, பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பார்வையற்ற சமூகத்திற்கு ஒரு வெளிச்சம் ஆகினார்.அத்துடன் இந்த நாட்டில் கடந்த சில அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக நடந்ததால் தான் இனவெறிக்கு எதிராக தோழர்களாகிய உங்களை அந்த சமூகம் நேசித்தது. அதனால் நீங்களும் அவர்களை புறக்கணித்து கடந்து செல்லாமல் பொருத்தமான சம இடத்தை வழங்கி அவர்களின் நம்பிக்கையை வெல்ல வைக்க வேண்டும் என்றார்.

No comments: