பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் நம்வபர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் மக்களின்வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவுசெய்யப்படும் 29 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட 2024.09.24 ஆம் திகதிய 2403/13 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அன்றையநாள் மிகவும் விசேடமானதாகும்.
முதலாவது அமர்வு நாளில் சபாமண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது.
முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர் அரசியலமைப்பின் 64 (1) உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகரை வாக்களின்பின் மூலம் நியமித்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை அதன் பின்னர் பிரதி சாபாநாயகரும் குழுக்களின் தலைவரும், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்வது இடம்பெறும்.
பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவுசெய்து நியமிக்க முடியும். எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாரா என்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும். எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரை சபாநாயகராகத் தெரிவுசெய்யுமாறு உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழியவேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது.
முதலில் சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்யவேண்டும் என செயலாளர் நாயகம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இதன்போது எவராவது ஓர் உறுப்பினர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்றால் குறித்த உறுப்பினரின் பக்கம் செயலாளர் நாயகம் பார்த்து நிற்க அந்த உறுப்பினரின் யோசனை சபைக்கு முன்வைக்கப்படும். ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு நபர்களின் பெயர்கள் உள்ளனவா என செயலாளர் நாயகம் சபையிடம் வினவுவது கட்டாயமாகும். அவ்வாறு வினவும்போது பிறிதொரு நபரின் பெயர் முன்வைக்கப்பட்டிருக்காவிட்டால் குறித்த உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த உறுப்பினரின் பெயரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் இருவரும் கையில் பிடித்துச் சென்று அவரை அக்கிராசனத்தில் அமர்த்துவது வழமையாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயமாகும்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கொண்டு வைப்பார்.
இவ்வாறு பதவிச்சத்தியம் செய்துகொண்ட சபாநாயகர் அக்கிராசனத்தில் அமர்வதற்கு முன்னர் தான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நன்றிதெரிவித்து சிறியதொரு உரையாற்றுவதும் சம்பிரதாயமாகும். தெரிவுசெய்யப்பட்ட புதிய சபாநாயகருக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சபாநாயகரும் நன்றி தெரிவித்து உரையாற்றுவார். அதன் பின்னர் சபா மண்டபத்திலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை எடுத்துக்கொள்வர்.
சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு பாராளுமன்ற முறைமையில் காணப்படுகின்றன. அவையாவன, சபாநாயகர் தெரிவு, பிரதிச் சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு போன்றவற்றின் போதும், பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் சந்தர்ப்பதிலுமாகும்.
அவ்வாறான வாக்கெடுப்பின் போது ஐந்து நிமிடங்கள் வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக சபையில் சமுகமளித்திருக்கும் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகரிடமிருந்து வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும். இந்த வாக்குச்சீட்டில் சபாநாயகராகத் தெரிவுசெய்ய விரும்பும் நபரின் பெயர் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினரின் கையொப்பம் என்பன இடப்பட்டு வெளியில் தெரியாதவாறு மடிக்கப்பட்டு வாக்குப்பெட்டியில் இடவேண்டும். வாக்களிப்பு நடத்தப்படும்முறை மற்றும் வாக்குகளின் எண்ணிக்கையை மேற்கொள்வதற்கான பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையே சாரும். செயலாளர் நாயகத்தின் மேசையிலேயே (Table of Parliament) வாக்குகள் எண்ணப்படும். மேசையில் வாக்குகள் எண்ணப்பட்டதும், அதன் முடிவுகள் சபைக்கு அறிவிக்கப்படும். எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குச்சீட்டில் வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினரின் கையொப்பம் இடப்பட்டிருக்காவிட்டால் அவை செல்லுபடிற்ற வாக்குகளாகக் கணக்கெடுக்கப்படும்.
சபாநாயகர் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினரின் வாக்குகள் நீக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார். அதேநேரம், பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தால் மேலே குறிப்பிடப்பட்டது போல ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு எஞ்சிய உறுப்பினர்களுக்கிடையில் மீண்டும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இறுதியில் அதிக வாக்குகளைப் பெறும் உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவார்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று உறுப்பினர்கள் போட்டியிடும்போது இரண்டு உறுப்பினர்களுக்கு மத்தியில் சம எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்பெற்றிருந்தால், சமமான வாக்குகள் உள்ள அவ்வேட்பாளர்களுக்கிடையே எவர் விலக்கப்பட வேண்டியவர் என்பது செயலாளர் நாயகத்தினால் தீர்மானிக்கக்கூடியவாறான திருவுளச் சீட்டின்மூலம் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் போட்டியிடும் இருவரும் சமமான வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இருந்தபூதும் அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் யாரை சபாநாயகராகத் தெரிவுசெய்வது என்பதை திருவுளச் சீட்டின் மூலம் தீர்மானிக்கும் பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்குக் காணப்படுகின்றது. இதில் திருவுளச் சீட்டு போடும் முறை பற்றித் தீர்மானிக்கும் உரிமையும் செயலாளர் நாயகத்துக்குக் காணப்படுகின்றது.
வாக்கெடுப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களை ஆகக் குறைந்தது ஒரு மாதகாலம் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேண வேண்டியதும், பாராளுமன்றத்திடமிருந்து பெறக்கூடிய ஏதேனும் பணிப்பிற்கமைய செயலாளர் நாயகம் வாக்குச்சீட்டுப் பத்திரங்களை அழித்துவிட்டு அதனைப் பாராளுமன்றத்திற்குச் சான்றுப்படுத்தலும் செயலாளர் நாயகத்தின் கடமையாகும். பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது பாராளுமன்ற நாள் அமர்வில் ஷபாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும். இதில் சபாநாயகர் முதன்முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன், அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும். இந்தப் பெயர் அட்டவணைப் புத்தகம் பாதுகாப்பான ஆவணமாகப் பேணப்படும்.
முதலாவது பாராளுமன்ற அமர்வு தினத்தில் பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வேண்டும். இவர்களின் தெரிவுகள் இடம்பெறும்போது சபாநாயகர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அக்கிராசனத்தில் இருப்பதனால் குறித்த அறிவிப்பு மற்றும் வாக்கெடுப்புப் போன்றன சபாநாயகரின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும். பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளர் பதவிக்கு ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டிருந்தால், வேறு எவரினதும் பெயர்கள் முன்மொழியப்படுகின்றனவா என சபையிடம் வினவவேண்டிய பொறுப்பு சபாநாயகருடையதாகும். அவ்வாறு வேறு பெயர்கள் முன்மொழியப்படாவிட்டால் குறித்த உறுப்பினர் பிரதி சபாநாயகர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படுவார். ஏதாவது சந்தர்ப்பத்தில் இந்தப் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டி ஏற்பட்டால் சபாநாயகரின் தெரிவின்போது பின்பற்றப்பட்ட வாக்களிப்புமுறை பின்பற்றப்படும். இதன்போது வாக்கெடுப்பு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவது செயலாளர் நாயகத்திற்குப் பதிலாக சாபாநாயகர் என்பது விசேடமாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட செயற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் முதல்நாள் அமர்வுகள் ஒத்திவைக்கப்படும். ஒத்திவைக்கப்படும் நாள் பெரும்பாலும் அடுத்த பாராளுமன்ற அமர்வுநாளாகவிருக்கும். இருந்தபோதும், அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்படுவதாயின், முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்குவந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.
எம். ஜயலத் பெரேரா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்),
இலங்கை பாராளுமன்றம்
No comments: