அபு அலா
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பெரிய உப்போடை - சீலாமுனை பிரதேசத்தின் பிரதான கழிவுநீர் செல்லும் வாய்க்கால் முழுவதும், கழிவுகள் நிறைந்துமிக மோசமான நிலைமையில் ஒரு வருடத்திற்கு மேலாக காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளநீர் வடிந்தோட முடியாமல் வீதிகள் மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி, கழிவுகள் நிறைந்தும் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
அது மாத்திரமல்லாமல் வீதியால் செல்ல முடியாதளவுக்கும், வீட்டினுள் இருக்க முடியாதளவுக்கும் துர்நாற்றம் வீசுவதாகவும், நுளம்புக்கடித் தொல்லை, பாம்புகளின் நடமாட்டம், டெங்கு நோய் பரவும் அபாயமும் காணப்படுவதாக அப்பிரதேச மக்களும், பிரயாணிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு பல தடவைகள் அறிவித்தும், அதற்கான நடவடிக்கையினை இதுவரை முன்னெடுக்காமல் கண்டும் காணதவர்கள் போன்று ஒரு அசமந்தப் போக்கில் செயற்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக இருக்கின்ற என்.சிவலிங்கம் என்பவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராகவும் இருக்கின்றார். இவர் இருக்கின்ற இரு பதவிகளும் மிக முக்கிய பாத்திரம் வகிப்பதால் எங்களது பிரச்சினையை நாங்கள் எங்கு போய்ச் சொல்லுவது என்று தெரியாமல் இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயத்தை கவனிக்க வேண்டிய பாரிய பொறுப்பு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராகவும் இருக்கின்ற என்.சிவலிங்கம் என்பவருக்கு இரட்டிப்பாக உள்ளது. அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களின் கிழக்கு மாகாண ஆணையாளராக இருக்கின்ற இருக்கின்ற என்.மணிவண்ணன் என்பவரும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சின் பதில் செயலாளராகவும் இருக்கின்றார்.
எனவே, உப்போடை - சீலாமுனை பிரதேச மக்கள் ஒரு வருடத்திற்கு மேலாக எதிர்நோக்கி வருகின்ற இப்பிரச்சினைக்கு மிக முக்கிய பதவிகளை வகிக்கின்ற இருவரும் இதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?
No comments: