கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் தெரிவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
குறைவான வளங்களைக் கொண்டு திறமையாக பணி செய்துவரும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதுஎன கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மின்பிறப்பாக்கி (Generator) மற்றும் ஒருதொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஏ.அகிலன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது. சுகாதார வைத்திய அதிகாரியினதும், அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்களினதும் கடின உழைப்பே அதற்குப் பிரதான காரணமாகும். குறித்த அலுவலகத்திற்கு எதிராக இதுவரை எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை.
அந்தவகையில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி அகிலன் உள்ளிட்ட அந்த அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களை பாராட்டுகின்றேன். இந்த அலுவலகத்தில் 5S முறைமையினை நடைமுறைப்படுத்தி இதன் சேவைத் தரத்தினை மேலும் கூட்ட வேண்டும். கடந்த காலங்களில் இந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சுக வனிதையர்களுக்கான சேவை வழங்குதலில் (well women programme) சிறப்பு விருதுகளையும் பெற்றுக்கொண்டது. அதனை தக்க வைத்துக்கொள்வது இங்குள்ளவர்களின் பொறுப்பாகும்.
உங்களுடைய தேவைகள் குறைபாடுகளை தெரியப்படுத்துமிடத்து அவற்றினை முடியுமானளவு நிவர்த்தி செய்வோம். எதிர்வரும் ஆண்டில் இந்த அலுவலகத்திற்கு அதிகமான நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியில் மருத்துவ பொறியியலாளர் எம்.என்.இப்ஹாம், கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments: