News Just In

8/27/2024 06:02:00 AM

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை முற்றிலும் சேதம்!




மகராஷ்டிரா: மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, கடற்படை தினத்தை ஒட்டி மகராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இருப்பினும் சிலை இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

திங்கள்கிழமை பகல் 1 மணியளவில், ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை முழுவதுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிலை சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்தனர். சிலை சேதமடைந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் தீபக் கேசர்கர், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அதே இடத்தில் புதிய சிலையை நிறுவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்பிரச்சினையை விரைவாக தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வரு கிறோம், என்று கூறினார்.

அதேநேரம் இச்சம்பவத்துக்கு மகராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிலை திறப்புக்கு பிரதமர் மோடியை அழைப்பதில் மட்டுமே மாநில அரசு கவனம் செலுத்தியதாகவும், மாநில அரசு தரமான பணிகளை மேற்கொள்ளாததே, சிலை இடிந்து விழுந்ததற்கான காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல், சிவசேனா (யுபிடி) கட்சியும், இந்த விவகாரத்தில், மாநில அரசு தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், சிலை கட்டுமானம் மற்றும் அமைப்பாளர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

No comments: