News Just In

7/24/2024 03:38:00 PM

“பாரம்பரியக் கலைகளின் மூலம் நிம்மதியையும் சமாதானத்தையும் அடையலாம்” !உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“உளவியல் ரீதியாக உள் சமாதானத்தையும் நிம்மதியையும் வழங்குகின்ற ஒரு அம்சமாக பாரம்பரியக் கலைகள் உள்ளன. அதனை வெளிநாட்டார் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்” என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்பன இணைந்து நடத்திய ஓரங்கட்டப்படு மருவி வரும் கலைகளையும் கலைஞர்களையும் உயிர்ப்பூட்டுவதற்கான கலாசார சங்கம நிகழ்வு கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் புதனன்று 24.07.2024 நடைபெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எஸ். நவநீதன், பல்கலைக்கழக கலைத்துறை விரிவுரையாளர்கள், கலைத்துறை மாணவர்கள், அகல் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கனகசிங்கம், பாரம்பரியக் கலைகள் இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பாரம்பரியக் கலைகளைக் கற்பதில் நமது மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் பாரம்பரியக் கலைகளைக் கற்று அதன்மூலம் தொழில் வாய்ப்பைப்பெறுவது என்பது சிக்கலாக இருக்கிறது. அதனோடு சமூக அங்கீகாரமு; கிடைப்பதில்லை இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில்தான் பாரம்பரியக் கலைகள் காணப்படுகின்றன.

ஆனால், வெளிநாடுகளில் நிலைமை வேறு. அங்கு இத்தகைய பாரம்பரியக் கலைகளுக்கூடான ஆற்றுகைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள், காரணம் உளவியல் ரீதியாக உள் சமாததானத்தையும் நிம்மதியையும் வழங்குகின்ற ஒரு அம்சமாக அவர்கள் பாரம்பரியக் கலைகளைப் பார்க்கிறார்கள்” என்றார்.

நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய விழுது ஆற்றல் மே;ம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன், விழுது நிறுவனத்தின் 20 வருட கால வரலாற்றில் கலைகளை வளர்ப்பதற்கான ஒரு திட்டமாக இதனை முதல் தடவையாக நாம் இளைஞர்களைக் கொண்டு அமுல்படுத்துகின்றோம்;. ஸ்கோப் திட்டத்தின் கீழ் இது அமுலாகிறது. சமூகங்களிடையே காணப்படுகின்ற பிரச்சினைகளை மையப்படுத்தி அவற்றைத் தீர்க்கின்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் நாம் மிகக் கூடிய கவனம் செலுத்துகின்றோம் மேலும், ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினருக்கான மனித உரிமைகளில் நாம் அதிக அக்கறை கொண்டு செயலாற்றி வருகின்றோம்.

இனிவரும் காலங்களில் எங்களது இலக்குக் குழுக்களில் கலைஞர்களும் உள்வாங்கப்படுவார்கள். அதன்மூலம் பாரம்பரியக் கலைகளுக்கு புத்துயிரளிக்கப்படும். பாரம்பரியக்; கலைஞர்களுக்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் பாரம்பரியக் கலைகள் உயிரூட்டப்படும்” என்றார்.

நிகழ்வில் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் தமிழ் வாழ்த்து, நடனம், மறுமலர்ச்சி; நாட்டுக்கூத்து, கிழக்கின் அகல் இளையோர் குழுவினரின் அனுபவப் பகிர்வு, ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைகளின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் கலந்துரையாடல், இளையோருக்கான சான்றிதழ்கள் வழங்கல், நாட்டார் பாடல்கள் சமர்ப்பணம், பறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரியக்கலைப் படைப்பு ஆகியவற்றோடு பாரம்பரிய உணவுகளை ருசித்துப் பார்க்கும் அறுசுவை நிகழ்வும் இடம்பெற்றது.

No comments: