மட்டக்களப்பு (Batticaloa) - வெல்லாவெளி பகுதியிலுள்ள யுவதி ஒருவர் காதல் முறிவால் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மண்டூர் தெற்கு பகுதியை சேர்ந்த18 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரே நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதுடன் யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.
இதன் பின்னர், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்த இளைஞன் வீட்டிற்கு வந்த யுவதியுடன் மீண்டும் காதல் தொடர்புகளை மேற்கொண்ட நிலையில் யுவதியின் தாயார் அதனை கண்டித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை (30), வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களின் பின்னர் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன்போது, தாயாருடன் உரையாடிக் கொண்டிருந்த யுவதி தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்ததனையடுத்து, உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை (Kalmunai) நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, குறித்த யுவதியின் பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: