விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட கல்வி என்ற கருத்து மாற்றம்பெற வேண்டும் என உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷோபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்புலனை இழந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் ரிஷோபன், உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு ஏ சித்திகளையும் ஒரு பி (2A B) சித்தியையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (03.06.2024) மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குறித்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
“சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது எனவும் அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் எனவும் நினைக்கின்றார்கள்.
அவ்வாறு இல்லை. நாங்களும் ஏனைய மாணவர்கள் பயிலும் அதே பாடத்திட்டத்தினையே பயில்கின்றோம். எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலை மாறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments: