News Just In

3/24/2024 02:17:00 PM

போதைப்பொருள் பாவனையின் விளைவுகளே பிரதேசத்தில் சிறுவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தோற்றுவாயாக உள்ளது

வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
போதைப்பொருள் பாவனையின் விளைவுகளே வெருகல் பிரதேசத்தில் சிறுவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தோற்றுவாயாக உள்ளது. போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் அநியாயங்களை இல்லாதொழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ் தெரிவித்தார்.

தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி கௌரவித்து ஊக்கமளிக்கும் நிகழ்வு இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் வெருகல் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் வெருகல் பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்வேறு பின்தங்கிய சூழ்நிலைகளுக்கும் மத்தியில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து படித்து முன்னேறி உயர் நிலையை அடைந்து கொண்ட மகளிரும் அயற் பிரதேசங்களில் இருந்து வெருகல் பிரதேசத்தில் கடமை புரியும் பதவியிலுள்ள பெண்களும் இன்னும் பல முன்னோடிப் பெண்களும் சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க மகளிர்களாக மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் நடனம், விழிப்புணர்வு நாடகம், பாடல் உட்பட கலை அம்சங்கள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் தலைமையேற்றுத் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அனஸ், “வெருகல் பிரதேசத்திலிருந்து பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஷ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக முன்னேறத் துடிக்கின்ற எதிர்காலத் தலைவர்களான சிறுவர் சிறுமியரை எதிர்காலத்தின் கல்வியாளர்களாக அதிகாரிகளாக அலுவலர்களாக உருவாக்க வேண்டு;ம். இதற்குத் தடையாக உள்ள அத்தனை காரணிகளையும் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும்.

எல்லாக் காலமும் வேறு பிரதேசங்களிலிருந்து வந்து வெருகல் பிரதேசத்திற்குச் சேவை செய்யும் அதிகாரிகளை இந்த ஊர் தொடர்ந்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்து கொள்வதற்காக இப்பொழுதிருந்தே இந்தப் பிரதேச மக்கள் மும்முரமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதேசப் பெண்களால் அப்பிரதேசத்திலுள்ள ஒட்டுமொத்தப் பிரச்சினைகள் தேவைகள் குறித்து பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அம்மகஜரில் “அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, பிரதேச மக்களுக்கு மூவேளை உணவு உண்ண முடியாத வறுமை நிலை, போஷாக்குக் குறைபாடு, தொழிலிழப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டணம் நீர்க்கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த முடியாத நிலைமை, பெண் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்யாது இடை விலகல், இளவயதுத் திருமணம், வீட்டு வன்முறைகள் சிறுமிகளும் பெண்களும் துஷ்பிரயோகம் பாலியல் வன்முறைகள் கடன்; சுமை” உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் கடுமைiயாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் சாமரி விஜேசிங்ஹ வெருகல் பிரதேச சபைச் செயலாளர் சுஜாதா வரதகுமார், வெருகல் நீர் வழங்கல் அதிகாரசபை பொறுப்பதிகாரி தயானந்தி நிறோஷா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எஸ் பானு, உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களான பொன்னுத்துரை சற்சிவானந்தம் ஜெயவீரசிங்கம் தவமுரளி பயனாளிகளான கிராம மட்ட கூட்டுறவு அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள்இ செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: