
டெல்லி மாநில எல்லையை ஒட்டிய ஃபரிதாபாத்தில் நடந்த மிகப்பெரிய வெடிபொருள் பறிமுதல் வழக்கில், லக்னோவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த பெண் மருத்துவர் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாக பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளன.
அவரை கைது செய்த டெல்லி காவல்துறை, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM)-இன் மகளிர் பிரிவை இந்தியாவில் நிறுவும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சாதியா அசார் தலைமையில் இயங்கும் “ஜமாத் உல்-முமினாத்” என்ற அமைப்பின் இந்திய பிரிவை உருவாக்கும் பணியில் ஷாஹீன் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதியா அசாரின் கணவர் யூசுஃப் காந்தஹார், ஒரு விமானக் கடத்தல் வழக்கில் மூளையாக இருந்தவர் என்றும், அவர் கடந்த மே 7 அன்று "ஒபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோவின் லால் பாக் பகுதியில் வசித்து வந்த ஷாஹீன் ஷாஹித், ஃபரிதாபாத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பான சதி முறியடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். அவரின் காரில் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஷாஹீன் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் என்றும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முசம்மில் கனாய் உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
பயங்கரவாத முயற்சிகள்
ஃபரிதாபாத்தில் முசம்மில் கனாயின் இரண்டு வாடகை அறைகளில் நடந்த சோதனையில், 2,900 கிலோ வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

முசம்மில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்; தௌஜில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
முசம்மில் மீது, ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்காக சுவரொட்டிகள் ஒட்டிய வழக்கில் ஜம்மு கஷ்மீர் காவல்துறை தேடப்படும் நபர் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ஜெய்ஷ்-இ-முகமது இந்தியாவில் தனது வலையை மருத்துவ மற்றும் கல்வி துறைகளின் மூலம் விரிவாக்க முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தற்போது டெல்லி காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வுக் முகமை (NIA) இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.
No comments: