News Just In

2/10/2024 05:58:00 AM

கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்ற பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் எவ்வித பதட்டமுமில்லாது நம்பிக்கையுடன் இருக்க முடியும் : இடமாற்றம் ரத்தே என பாராளுமன்ற உரையில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !



நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் இன்றும் கூட ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுனருடன் பேசி ஒரு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இடமாற்ற பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் எவ்வித பதட்டமுமில்லாது இது ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி என்ற அடிப்படையில் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரைநிகழ்த்திய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் நடைபெற தேவையான முஸ்தீபுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க போன்றவர்களிடம் நான் மாணவர்களின் கல்வி நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்தி ஈற்றில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் இந்த இடமாற்றம் ரத்து செய்யப்படும் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருந்ததுடன் உறுதிமொழியையும் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தார்.

ஆசிரிய தொழிற்சங்கங்கள் எங்களை சந்தித்து பேசியபோது கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் 2016 ஆம் ஆண்டின் ஆசிரியர் வெற்றிட நியமத்தை அடிப்படையாக கொண்டு இந்த இடமாற்ற பட்டியலை தயாரித்துள்ளதாக தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இவைகள் இப்படி இருக்கத்தக்கதாக எதை அடிப்படையாக கொண்டு இந்த ஆசிரியர் இடமாற்றங்கள் மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது என்று தெரிவித்தார்.

No comments: