
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களுக்கான நிதியானது,2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபாவைக் கொண்டே முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் அமைச்சரவை இந்த விடயத்திற்கு இணங்கியுள்ளது.
அரசாங்கத்திடம் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி நிலைமையினால், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை தற்போது நடத்த முடியாத சூழல் காணப்படுகின்றது.
எனவே இந்த மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு தேவையான நிதியை 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினூடாக வழங்க வேண்டும். இது தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்த 2 தேர்தல்களையும் நடத்துவதற்கு முன்னதாக விசாரணை ஆணைக்குழுவினால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளன.
தேவைப்படும் பட்சத்தில் அந்த பரிந்துரைகளுக்கு அமைய தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இதனை நாம் நாடாளுமன்றத்தின் அனுமதியின் ஊடாகவே அறிமுகம் செய்யவேண்டும்.
இது தொடர்பாகவும் அமைச்சரவையில் நாம் கலந்தாலோசித்துள்ளோம்” என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்
No comments: