News Just In

12/25/2023 09:09:00 PM

இன்று புனானை வனப்பகுதியில் இடம்பெற்ற விதைப்பந்து திருவிழா!

புனானை வனவளத்துறை அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள வனப்பகுதியில் விதைப்பந்து திருவிழா 23.12.2023 அன்று காலை 9.30 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த அற்புதமான வனமீளுருவாக்கல் செயற்திட்டத்திடனை We For Us எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த We For Us நிறுவனமானது மட்டக்களப்பு இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இளைஞர் அபிவிருத்தி, நல்லினக்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று துறைகளிலும் முதன்மையாக செயற்பட்டு வருவதோடு இந்த துறைகளினூடாக இளைஞர்களுக்கான பல் வகைப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டகள், தலைமைத்துவ பயிற்சிநெறிகள், கற்கை நெறிகள், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் போன்ற பல தரப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் GreenBatti எனும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பினை பசுமையாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்த விதைப்பந்து திருவிழா நடாத்தப்பட்டது.

இதில் புளி, வேம்பு, வாகை , ஆத்தி , இலுப்பை , மஞ்சாடி, புங்கை , நாவல் , கூலா , திருக்கொன்றை, மதுரை போன்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்டு விதைகளைக்கொண்டு , விதைப்பந்துகளாக We For Us இன் இளையோர் படையணியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டு புனானை வனப்பகுதியில் வீசப்பட்டது.

மேலும் இதன்போது 1000 மேற்பட்ட மரங்களும் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைப்பந்துகள் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அனைத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான A.M Riyas Ahamed அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது . இந்த விதைப்பந்து திருவிழாவிற்கு நிதியுதவியினை “ஓராயம் நிதியம்” வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “MSM creation photography” புகைப்பட உதவியினை வழங்கியிருந்தது.

2024 இல் இந்த GreenBatti செயற்றிட்டத்தின் ஊடக இதனை விட பல ஆயிரம் விதைப்பந்துகளை வீசுவதற்கு We For Us நிறுவனத்தினர் உத்தேசித்துள்ளனர்.














No comments: