News Just In

6/15/2023 10:35:00 AM

சூடுபிடிக்கும் இந்திய அரசியல்! CBI மீது ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!



மத்திய புலனாய்வுத் துறைக்கு(CBI) வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்ப பெற்றிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,"மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)}-இன் பிரிவு 6-படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் (13.06.2023) செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை தலைமை செயலகத்திலும் 13 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் (13.06.2023) இரவு சோதனை முடிந்த பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய விசாரணை நிறுவனங்களான சிபிஐ, என்.ஐ.ஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,“ தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்த பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடங்கி தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி வரை பலரை மத்திய புலனாய்வு நிறுவனங்கள் விசாரணைக்கு அழைப்பது, கைது செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இதுபோல் கைதாகி உள்ளார்.
டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் சகோதரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகருமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இதேபோன்று மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக்கும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.




No comments: