News Just In

6/27/2023 07:52:00 AM

கொழும்பில் பிச்சைக்காரர்களின் தொல்லை - அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

காலி முகத்துவாரப் பகுதியில் பிச்சைக்காரர்களின் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி முகத்துவாரப் பிரதேசத்தில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சுமார் 150 பிச்சைக்காரர்கள் நடமாடி மக்களை துன்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிச்சைக்காரர்களின் செயற்பாடு தொடர்பில் துறைமுக அமைச்சுக்கு தொடர்ச்சியான அறிக்கைகள் கிடைக்கப்பெற்று, இப்பிரச்சினைக்கு தீர்வாக இந்த பிச்சைக்காரர்களை ஹம்பாந்தோட்டை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகாரசபை மற்றும் காவல் திணைக்களம் இணைந்து அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ரிதியகம மையத்தில் இந்த பிச்சைக்காரர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு மற்றும் குடிநீரை வழங்குவதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடுகளை சமூக பாதுகாப்பு சேவையாக வழங்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கினார்.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நேற்று (26) காலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

அமைச்சின் செயலாளர், கே. டி.எஸ். ருவன்சந்திர, துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத். பெர்னார்ட் மற்றும் துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகள், துறைமுக அதிகாரசபையுடன் இணைந்த அதிகாரிகள் குழு மற்றும் காவல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

No comments: