News Just In

5/28/2023 07:56:00 AM

சாதனை படைத்த 5 வயது தமிழ் சிறுவன்! குவியும் பாராட்டுக்கள்

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் 5 வயது மகனே ஹர்சித் ஆவார்.

இவர் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்று வருகிறார்.

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி ‘‘புதிய சோழன் உலக சாதனை‘‘ படைத்துள்ளார்.

இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களூடாக கேள்விப்பட்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர் சிறுவனின் முயற்சியை முறைப்படி பரிசோதித்து உலக சாதனையாக அங்கீகாரம் செய்துள்ளது.
இதற்கான நிகழ்வு நேற்றுமுன்தினம் (26.05.2023) நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்களான எஸ்.ரவிச்சந்திரன், என்.நவரத்னம், பொறுப்பதிகாரி எஸ்.ஆனந்தஜோதி மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

உலக சாதனை முயற்சிக்கு நடுவர்களாக நேரில் வந்து பார்வையிட்டு உறுதி செய்து உலக சாதனைக்கான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பதக்கம் போன்றவற்றை வழங்கி சிறுவனை கௌரவித்துள்ளனர்.

மேலும், அந் நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் முனைவர் யூட் நிமலன் மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழுவின் உறுப்பினர் பெருமாள் நீலமேகம், பொது தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை மற்றும் 24 நாடுகளின் கிளைகளின் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் போன்றோர் சிறுவனை வாழ்த்திப் பாராட்டியுள்ளனர்.

No comments: