News Just In

5/20/2023 08:15:00 PM

உலகளாவிய இராமகிருஷ்ண மிஷன்களின் 125 – ஆண்டு ஸ்தாபகதின விழா இன்று மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெற்றது!

உலகளாவிய இராமகிருஷ்ண மிஷன்களின் 125 – ஆண்டு ஸ்தாபகதின விழா இன்று கல்லடியில் அமைந்துள்ள விபுலானந்த மணி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இராமகிருஷ்ண மிஷன்களின் 125 – ஆண்டு ஸ்தாபக ஆண்டு கொண்டாடும் இதேவேளை மட்டக்களப்பில் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபிக்கப்பட்டு 97 வருடங்களையும் இவ்வாண்டு குறிப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மேற்படி நிகழ்வுகளைச் சிறப்பிக்குமுகமாக உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனின் உப தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜீ மஹராஜ் அவர்கள் மட்டக்களப்புக்கு 18.05.2023 வியாழன் அன்று வருகை தந்து இருந்தார்.

அவரது வருகையின் மூன்றாவது நாள் நிகழ்வாக சிறப்பு பொது நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கூட்டத்தினால் மண்டபம் நிரம்பி வழிந்தது.

பஜனை, வாத்திய கச்சேரி என்பவற்றுடன் கலாப்பனா நிலைய மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளரின் வரவேற்பு உரையை தொடர்ந்து இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ராத்மானந்தஜீ மஹராஜ் அவர்களின் தலைமையுரை நடைபெற்றது. அவர் தனது உரையில் “துறவிகள் ஒரு இடத்தில் இராமல் அடிக்கடி ஊர்ஊராக சென்று பிச்சை எடுப்பவர்கள். இவர்களால் சமூகத்திற்கு எந்த பிரயோசனமும் இல்லை என துறவிகளை ஏளனமாக நோக்கும் ஒரு நிலைமை அக்காலத்தில் ஏற்பட்டது. இதனால் துறவிகள் சமூகத்தை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சுவாமி விவேகானந்தரோ துறவிகள் சமூகத்தை விட்டு விலகி இருக்கவேண்டியதில்லை. துறவறத்தை விரும்புபவர்கள் துறவறத்தை கடைப்பிடிக்கலாம். சமூகத்திற்கான சேவையைச் செய்ய விரும்புபவர்கள் சமூகத்திற்கான சேவையைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு இன்று 125 வயது என்றார்.

காசி இராமகிருஷ்ண மிஷன் மடத்தை சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தஜீ மஹராஜ் அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து ஸ்ரீமத் சுவாமி நீலமானந்தஜீ மஹராஜ் அவர்களால் எழுதப்பட்ட “இந்துமதம் ஒரு பார்வை” என்ற நூலும் இசை இறுவெட்டும், கையேடும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜீ மஹராஜ் அவர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராமகிருஷ்ண மிஷன் சேவைப் பணியில் இணைந்து செயற்படும் 26 நிறுவனங்களுக்கு கௌரவிப்பும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: