News Just In

5/25/2023 11:20:00 AM

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு!




நூருல் ஹுதா உமர்

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக நுழைந்த கல்முனை உப பிரதேச செயலக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கல்முனை விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு நீதிபதிகள் குழாமினால் விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களாக கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றுக்கு தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற குழாமுக்கு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த போது வழக்காளியான பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த கோரிக்கைக்கு எதிராக தனது கடுமையான ஆட்சபனையை வெளியிட்டார்.

இன்றைய தினம் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க இருந்த நிலையில் இவ்வாறான இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்க கூடாது என்றும் இடைக்கால தீர்வை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது வாதத்தில் நீதிமன்றுக்கு முன்வைத்தார். எதிர்தரப்பினரிடமும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் இந்த இடையீட்டு மனு தொடர்பில் வினவிய நீதிபதிகள் குழாம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தரப்பினது ஆட்சபனையை வழங்க ஒரு வார கால அவகாசமும் இடையீட்டு மனுதாரர்களின் ஆட்சபனைக்கான பதிலை நீதிமன்றுக்கு வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் 07ம் திகதிவரை இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த இடையீட்டு மனுவை ஏற்பதா இல்லையா என்பது தொடர்பிலான விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தின் பின்னரே இடைக்கால தீர்வுகள் வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த வழக்கு தொடர்பில் தமிழ் மக்களிடமும், முஸ்லிம் மக்களிடமும் பலத்த வாதபிரதி வாதங்கள் சில தினங்களாக இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: