News Just In

12/23/2022 01:44:00 PM

தினேஷ் ஷாப்டர் படுகொலை - கொலையாளியை நெருங்கிய பொலிஸார் - பின்னணியில் உண்டியல் பணப்பரிமாற்றம்




ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.

இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நபரின் நடத்தை தொடர்பில் அவதானம் செலுத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்யவோ அல்லது விசாரணை செய்யவோ இல்லை. அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

தொலைபேசி பகுப்பாய்வு மூலம் ஆதாரங்கள் தெளிவாக வெளிப்பட்டதை அடுத்து அவரைக் கைது செய்யத் தயங்கப் போவதில்லை என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர் கொலை விசாரணையை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தக் குற்றத்தை இவரே செய்திருந்தால் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என புலனாய்வுப் பிரிவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தினேஷ் ஷாப்டர் உண்டியல் போன்று பணப்பரிமாற்ற தொழிலை நடத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 16 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: