News Just In

9/30/2022 07:33:00 AM

மாநகர சபையினால் திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் நடமாடும் நூலகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது!

வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் நேற்று (29) நடமாடும் நூலகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

"அறிவார்ந்த சமுகத்திற்கான வாசிப்பு" எனும் தொனிப்பொருளில் இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படுவரும் நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையானது வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஓர் அம்சமாக நடமாடும் நூலகங்களை பாடசாலை ரீதியில் அங்குரார்ப்பணம் செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதன்படி மட்டக்களப்பு மாநகர சபையின் நூலகக் குழுவின் மேற்பார்வையில், மட்டக்களப்பு பொது நூலகத்தின் ஒழுங்கமைப்பில் திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் நடமாடும் நூலகம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

அத்துடன், வாசிப்பின் முக்கியத்துவத்தினையும், அதன் ஊடாக மாணவர்கள் அடையும் அனுகூலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் வீதி நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவ அட்டைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

வாசகர் வட்டத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம் தலைமயில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் நூலக மற்றும் பயன்பாட்டுக் குழுவின் தலைவரும், மாநகர சபையின் உறுப்பினருமான ச.கமலருபன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர் ம.சண்முகலிங்கம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய அதிபர் திருமதி. வேணிதரன், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன், மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூலகர் செல்வி. த.சிவராணி உள்ளிட்டவர்களுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










No comments: