News Just In

5/26/2022 06:45:00 AM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிரடி தீர்மானம்!

ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் உள்ளன.பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும, அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ( Gotabaya Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளார்.

திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (25) முற்பகல் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கு முகங்கொடுத்து, அந்நிய செலாவணியை உருவாக்குவதுடன், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை கைப்பற்றுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திறமையான தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலம், அதிக ஊதியம் பெறும் தொழிலுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தாதியர் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளது. ஜப்பானில் மட்டும் முதியோர் பராமரிப்பு மற்றும் உணவு விநியோகம் சார் துறையில் 350,000ற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டுகிறது.

தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழி அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரச சேவையில் உள்ள எந்தவொரு நபரும் அல்லது பல்நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு ஊழியர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் போது மூப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம், வீடமைப்புக் கடன்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வசதிகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வருவதற்கு அவர்களை ஊக்குவிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தூதரகங்களின் தலையீட்டின் ஊடாக தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் லைன் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

No comments: