News Just In

1/05/2022 11:54:00 AM

வட்டிக்கடன் சுமைக்குள் காத் தான்குடி நகர சபையைத் தள்ளிவிட வேண்டாம்நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள் வேண்டுகோள்



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“200 மில்லியன் ரூபாய் பாரிய வட்டிக்கடனை பெறுவதற்கு முயற்சிக்கிறீர்கள். இதன்மூலம் நகர சபையினை மீண்டுமொருமுறை அநாவசிய வட்டிக்கடனுக்குள் தள்ளிவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்." என புதன்கிழமை (05.01.2022) காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2009ல் பொறுப்பற்ற முறையில் பெறப்பட்ட கடனும் வட்டியும் தற்போதுதான் நகரசபையினால் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே நகரசபையின் பணம் 124 மில்லியன் ரூபாய் நாசமாகியுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வுகளின்போது எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மிகத்தெளிவாகவும் விரிவாகவும் தெரிவித்திருந்தோம்.

மேற்படி 200 மில்லியன்( 20 கோடி) கடனானது, நகர சபையின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் டெலிகொம் வீதியில் நகரசபைக்குச் சொந்தமான பழைய மடுவம் அமைந்திருந்த காணியில் நவீன கடைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகளை செய்வதற்கு பெறப்படுவதாக தங்களால் தெரிவிக்கப்பட்டது.மேலும், இக்கடைத் தொகுதியினை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு 2000 மில்லியன் (200கோடி) ரூபா அளவில் தேவைப்படும் என்றும் கூறப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் கருத்துக்களை நாம் முன் வைத்திருந்தோம்.200 மில்லியன் ரூபாய் தொகை வங்கியிலிருந்து 10 வருட கடனாக பெறப்படும்போது மாதமொன்றுக்கு வட்டியாக மாத்திரம் 15 இலட்சம் அளவில் செலுத்த வேண்டிவரும். முதல் தொகையோடு சேர்த்து மொத்தமாக மாதாந்தம் 30-35 லட்சரூபாய் அளவில் செலுத்த வேண்டி ஏற்படும். (வருடமொன்றுக்கு 3-4 கோடி ரூபாய்).

எனவே நகரசபை மீதான பாரதூரமான நிதிச்சுமையாக இது அமையும்.
ஆக கடனாக பெறப்படும் 200 மில்லியன் தொகைக்குரிய வட்டித் தொகையானது அவசியமற்ற செலவாகவும் நிதிச்சுமையாகவுமே மாறுகின்ற அபாயம் இங்கு உள்ளது.

கடந்த 2009ம் ஆண்டின் போது இதுபோல் வட்டிக்கு கணிசமான ஒரு கடன் தொகை நகர சபையினால் பெறப்பட்டது. ழூஅது பற்றிய அபாயத்தினை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதனையும் புறக்கணித்து முன்னாள் தவிசாளர் முபீனால் பெறப்பட்ட அந்தக் கடனானது மக்களுக்கு எந்தப்பிரயோசனமும் அளிக்கவில்லை என்பதோடு அதற்குரிய வட்டியும் முதலுமாக சேர்த்து கடந்த பத்து வருடங்களாக பாரிய தொகைகளை மாதாமாதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவரை மொத்தமாக 124 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஒரு ரூபாய் கூட மக்களுக்கு பிரயோசனம் அளிக்கவில்லை. இதனை நல்லதொரு பாடமாக எடுக்காது மேலும் மேலும் வட்டி கடன் சுமைகளுக்குள் நகரசபையினை தள்ளிவிடுவது பொருத்தமானதல்ல.

எனவே நாம் மேலே முன்வைத்துள்ள காரணங்கள் மற்றும் நியாயங்களின் அடிப்படையில் இப்பாரிய கடன் தொகை பெறும் திட்டத்தை கைவிட்டு, வேறு ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்,

ஏ.எல்.எம். சபீல் நழீமி.

ஜம்ஹ_த் நிசா மஸ{த்

பஹ்மியா ஷெரீப்,

காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள்.


No comments: