News Just In

11/07/2021 06:35:00 PM

நாட்டுப்பற்று மிக்கவர்களாகிய நாங்கள் பயங்கரவாத செயல்களுக்கு எப்போதும் துணை போகின்றவர்கள் இல்லை- பல்லின ஒற்றுமை மலர இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் : றிசாத் பதியுதீன்.

எம்மை பயமுறுத்தும் மோசமான காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூத்த தலைவர்கள் கடந்த காலங்களில் பெற்றுத்தந்த உரிமைகளை பறித்தெடுக்க கோஷமிடும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களுக்கு அழிவை உண்டாக்க இறைவனை நிந்தித்த ஒரு தேரரை ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தலைவராக நியமித்து எமக்கு மற்றுமொரு அச்சுறுத்தலை விடுத்து நினைத்ததை செய்வோம் நீங்கள் இணங்கிச்செல்ல வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சனிக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வரலாற்றில் நும்ரூத், பிரௌனை கண்ட நாங்கள் ஈமானுடன் இருப்பதனால் இந்த நாட்டில் வரப்போகும் ஆபத்துக்களை எதிர்கொண்டு அச்சமில்லாத சமூகமாக எம்மை நாம் மாற்றிக் கொள்ளவேண்டிய தேவை எமக்கிருக்கிறது. இந்த நாட்டில் எமக்கெதிரான சதிகளை முறியடித்த நிம்மதியான ஆட்சி மலர்ந்து பல்லின ஒற்றுமை மலர நாம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த நாட்டில் எவ்வித பயங்கரவாதமும் தலைதூக்க கூடாது என்று விரும்பும் நாட்டுப்பற்று மிக்கவர்கள் நாங்கள். பயங்கரவாத செயல்களுக்கு நாங்கள் எப்போதும் துணை போகின்றவர்கள் இல்லை. இஸ்லாமிய பெயரில் பல சதிகள் இடம்பெற்று முஸ்லிங்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கியுள்ளார்கள். எந்த குற்றமும் செய்யாத சிறு பிள்ளைகள், உலமாக்கள், சட்டத்தரணி, அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழ் சகோதரர்கள் என பலரும் பல மாதங்களாக சிறையில் வாடுகிறார்கள்.

நான் அமைச்சராக இருந்த போது உணவுப்பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதில் மிகக்கடுமையாக இருந்தோம். நான் அமைச்சராக இருந்தபோது என்னிடம் வந்து எரிவாயு கம்பனியினர் 200 ரூபாய் கூட்டுமாறு பலமணிநேரம் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் ஒரு கம்பனியை திருப்திப்படுத்துவதா அல்லது இந்த நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களை திருதிப்படுத்துவதா? அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதா என்று சிந்தித்து மக்களின் பக்கமே இறுதியில் முடிவுகளை எடுத்தோம்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உற்பத்தியாளர்கள், நிறுவனங்களை சந்தித்து பேசினோம். அப்படி கலந்துரையாடித்தான் உணவுப்பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்கினோம். நான் தனியாளாக நிர்வாகித்த அமைச்சை இன்று விமல், பந்துல, லசந்த அழகியவண்ண போன்ற எட்டுபேருக்கு பிரித்து கொடுத்திருக்கிறார்கள். நான் தனியாளாக அதை கையாண்டபோது எப்படி கடினமாக இருந்திருக்கும் என்பதை உங்களுக்கு சிந்திக்க முடியும். அப்படியான காலத்தில் கூட மக்கள் வீதிக்கு இறங்கி விலையுயர்வுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அந்த காலத்தில் எங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை மக்கள் நன்றாக அறிவார்கள். தாங்கமுடியாதளவு பொய் குற்றச்சாட்டுக்கள் எங்கள் மீது முன்வைக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டு எனக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்காக எவ்வித வழக்குகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதை நீதியின் பக்கம் இருப்போர் நன்றாக அறிவார்கள். இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்குரிமையை சட்டரீதியாக உறுதிப்படுத்தியமைக்காக நான் முதலில் சிறையில் அடைக்கப்பட்டேன். இந்த நாட்டின் எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் பயங்கரவாத தடுப்பு கீழ் இதுவரை செய்யவில்லை ஆனால் ஜனாதிபதியை போன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட என்னை பாராளுமன்ற மரபுகளை மீறி, சட்டமா அதிபர் திணைக்கள அனுமதியில்லாமல் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நியாயமான விடயங்களை முன்வைத்து என்னுடைய விடுதலைக்கு முன்னர் தெளிவாக பாராளுமன்றத்தில் பேசினார். கட்சி பேதங்களுக்கு அப்பால் எனக்காக பலரும் நியாயம் கேட்டார்கள்.

விக்னேஸ்வரன், சம்பந்தன், சாணக்கியன், சுமந்திரன், பொன்னம்பலம் போன்றோர்கள் உட்பட லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித போன்ற பலருமாக 44 பேரளவில் கையெழுத்திட்டு பாராளுமன்ற மரபுகளை கோடிட்டுக் காட்டி நீதியையும், சட்டத்தையும் முன்னிறுத்தி சபாநாயகரிடம் எனக்காக நீதியை கேட்டார்கள். சட்டமா அதிபர் இது தொடர்பில் விளக்கமளிக்க கோரினார்கள். மக்களும் எனக்காக போராடியதுடன் இறைவனிடமும் கையேந்தி பிராத்தித்தார்கள். இவர்களுக்கு நன்றி கூற செல்லுமிடமெல்லாம் அவர்களின் உள்ளம் நெகிழ்ந்து என்னை கட்டியணைத்து அழுகிறார்கள்.

என்னையும் தமிழ் சமூகத்தையும் பிரிக்க பல சதிகள் கடந்த காலங்களில் நடந்தது. ஆனால் என்னுடன் தமிழ் மக்களும், தாய்மார்களும் அன்புடனே இருக்கிறார்கள். நான் வடக்கின் பல பகுதிகளுக்கும் சென்ற போது தாய்மார்கள் கண்ணீர்மல்க என்னை வரவேற்றனர். பௌத்த தேரர்கள் என்னுடன் அன்பாக இருக்கிறார்கள். எனக்காக பேசுகிறார்கள். எனக்கு அநீதியிழைத்த அநீதியாளர்களை சபிக்கிறார்கள். என்னுடைய கைதின் தாக்கம் பலருக்கும் உள்ளங்களை உருகவைத்துள்ளது. எனக்கு ஒரு வங்கிக்கணக்குத்தான் உள்ளது. அதுவும் பாராளுமன்றத்தில் உள்ள வங்கியில் மட்டுமே எனக்கு கணக்கிருக்கிறது. வெளிநாடுகளிலிரு ந்து ஒரு ரூபாய் கூட என்னுடைய வங்கிக்கணக்குக்கு வந்ததும் கிடையாது. என் மீது எந்த குற்றமும் இருக்கவில்லை என்றார்.

நூருல் ஹுதா உமர்
No comments: