News Just In

10/07/2020 12:21:00 PM

பாடசாலை வகுப்பறை ஒன்றில் இருக்க கூடிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி!!


வகுப்பறைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் முறைகளைத் திருத்தியமைத்து மேலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையை அறிமுகம் செய்வதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

அது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு....

முதலாம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கைக்கு அமைய அதிபர்கள் செயற்படுவர். அதேபோல் புலமைப்பரிசில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் குறித்த பாடசாலை அதிபர்கள் நடவடிக்கையெடுப்பர்.

மேலும் 37/2008 மற்றும் 33/2009 சுற்றறிக்கைகளுக்கமைய பாடசாலை அதிபர்களின் ஒப்புதலுடன் இடைத் தரங்களுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். 

அதற்கமைய இடமாற்றத்தால் வதிவிடம் மாற்றமடைதல், வெளிநாட்டிலிருந்து வருகை தரல், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படல், நீதிமன்ற நீதவான்கள், அரச விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் அரச மருத்துவர்கள், பாடசாலைகளில் மற்றும் கல்வி அமைச்சில் அல்லது அதனுடன் இணைந்த திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் இடைத் தரங்களில் சேர்த்துக் கொள்வதற்கு தகுதியானவர்களாவர்.

அவ்வாறே மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்பட்ட அநீதிகளால் தகுதிவாய்ந்தவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலுள்ள மாணவர்கள் போன்றவர்களும் இடைத் தரங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாவர்.

அவ்வாறு மாணவர்களை உள்வாங்குவதில் விண்ணப்பங்களைக் கவனத்தில் கொண்டு, ஒரு வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் முறைகளைத் திருத்தியமைத்து மேலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையை அறிமுகஞ செய்வதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments: