அரச காணிகளை அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை விஸ்தரிக்கும் பொருட்டு புதிய விதிமுறைகளை பயன்படுத்தும் செயல்பாடுகளை காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இந்த விசேட திட்டத்துக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு அரச காணிகளை பகிர்ந்தளிக்கும்நடவடிக்கையில் காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்களம் இறங்கியுள்ளது.
இந்த காணி பகிர்ந்தளிக்கும் விசேட இணைப்புக்குழு கூட்டம் நேற்று( 1 6) மாவட்ட செயலகத்தின் .கேட்போர்கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள பாடசாலைகள், கல்வித் திணைக்களங்கள், சுகாதார சேவை நிலையங்கள், வைத்தியசாலைகள், விவசாய துறைசார்ந்த அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்கா உட்பட அரச கட்டிடங்கள் அமைந்துள்ள காணிகள் மற்றும் தொழில் நிமிர்த்தம் தனியார் பயன்படுத்திவரும் காணிகள் உட்பட மதஸ்தலங்கள் அமைந்துள்ள அரச காணிகளை பயன்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.
இதற்கமைவாக பிரதேச செயலாளர்கள், சுற்றாடல் அதிகார சபை, நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் போன்ற சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் முறையான அனுமதி மற்றும் சிபாரிசுடனான முன்மொழிவுகளுக்கமைய குறுகிய கால மற்றும் நீண்டகால குத்தகை மற்றும் தொடர் பாவணைக்காக இவ்வனுமதிகள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.
இந்த விசேட கூட்டத்தில் கரடியனாறு அரசவைத்தியசாலைக்கு சுமார் 2 5 ஏக்கர் அரசகாணியைபகிர்ந்தளிப்பதென்றும், ஏறாவூர் உதவிப்பொலிஸ் அத்தியட்சர்பணிமனைக்கு கொடுவாமடு பகுதியிலும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு கழிவு நீர்சுத்தப்படுத்தும் நிலையம் அமைக்கவும் சேனைப்பயிர்செய்கையாளர்களுக்கு குத்தகை அடிப்படையிலும், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் காட்டுயானை தடுப்பு பணிமனைகளை நிறுவ அரச காணிகளை பகிர்ந்தளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காணிப்பிரிவின் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் காணி பயன்பாட்டு திட்டமிடல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எஸ்.கிருசாந்தி.,திட்டமிடல் உத்தி யோகத்தர்களான இன்பதேவி அருளானந்தம்,எஸ்.அருள்ராஜா ,பிரதேச செயலாளர்கள், காணிப்பிரிவிற்கான, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணையகப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் கரையோர நீர்வள உயிரின வளர்ப்பு அபிவிருத்தி சபை உதவிப் பணிப்பாளர்கள், தொல் பொருள், விவசாயம், வனப்பாதுகாப்பு, வனஜீவி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டனர்.






No comments: