(தந்தை செல்வா நினைவு அறக்கட்டளையின் இரங்கல் செய்தி)
தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் முன்னைய நாள் அறங்காவலர் ஐயா மண்டூர் மகேந்திரன் அவர்கள் மட்டக்களப்பு கல்லடியில் அவரது இல்லத்தில் (19.06.2020)காலை இயற்கை எய்தினார் அன்னாரின் இறுதி கிரிகைகள் (20.06.2020) மாலை 04.30 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அமரர் மண்டூர் மகேந்திரன் அவர்களின் சமூக பணி தொடர்பாக சிறு குறிப்பு
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஆரம்ப காலத்தில் அறங்காவலராக செயற்பட்ட மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தினை சேர்ந்த திரு மகேந்திரன் அவர்கள் உடல்நலப் பாதிக்கப்பட்டு தனது தனிப்பட்ட அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் அறங்காவலர் பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
ஆரம்பக் காலத்தில் மட்டக்களப்பு தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியில் தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்தார் அதன்பின் கொழும்பில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்று கொழும்பில் குடியேறினார்.
கொழும்பு தமிழரசுக் கட்சிக் கிளையின் தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டார். தந்தை செல்வாவின் கொள்கைகளில் தீவிர பற்றுக்கொண்டவர் தந்தை செல்வாவின் வியாழக்கிழமை சந்திப்புகளில் முக்கியமானவர்.
இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டின் பிதாமகன் அட்வகேட் கந்தசாமி அவர்களின் உதவியாளராகவும் பல முக்கிய வழக்குகளில் ஆவணங்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்
இனக்கலவரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சனாதிபதியால் நியமிக்கப்பட்ட சன்சோனி ஆனைக்குழுவில் சாட்சியங்களை தாக்கல் செய்ய அட்வகேட் கந்தசாமி அவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.
இலங்கை அரசினால் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வாதிட தந்தை செல்வாவிற்கு வழக்கின் ஆவணங்கள் திரட்டும் பணியைச் செய்துள்ளார்.
1977 மற்றும் 1983ம் ஆண்டுகளில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவினார்.
1978ம் ஆண்டில் கிழக்கில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து கொடுத்து மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர். எந்தவொரு அரசியல் பதவிக்கும் ஆசைப்படாது வாழ்ந்தவர். தமிழரசுக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அதேசமயம் மக்கள் சேவையில் மிக சிறந்த சமூக செயற்பாட்டாளர்.

No comments: